×

மாநிலம் முழுவதும் செயல்படும் 1200 எம்சாண்ட் குவாரிகளில் ஒரிஜினல் எம்-சாண்ட் தயாரிப்பதாக 270 குவாரிகளுக்கு மட்டுமே மதிப்பீட்டு சான்று

* சான்று பெறாத குவாரிகள் மீது நடவடிக்கை
* பிப்.11ல் தொழில்நுட்ப குழு அவசர ஆலோசனை

சென்னை: மாநிலம் முழுவதும் செயல்படும் 1200 எம்சாண்ட் குவாரிகளில் 270 குவாரிகள் மட்டுமே மதிப்பீட்டு சான்று கேட்டு விண்ணப்பித்துள்ளது. தமிழகத்தில் ஆற்றுமணலுக்கு மாற்றாக எம்சாண்ட் எனப்படும் செயற்கை மணல் பயன்பாட்டை ஊக்குவிக்க தமிழக அரசு முடிவு செய்தது. மாநிலம் முழுவதும் 1200 குவாரிகளுக்கு தனித்தனியாக பொதுப்பணித்துறை கடிதம் எழுதியது. இதையேற்று 270 குவாரிகள் மட்டுமே மதிப்பீட்டு சான்று கேட்டு விண்ணப்பித்துள்ளது. ஆனால், 900 குவாரிகள் தற்போது வரை சான்று கேட்டு விண்ணப்பிக்கவில்லை. இந்த நிலையில், 9 ஆற்றுமணல் குவாரிகள் மட்டுமே இயங்கி வருகிறது. இந்த குவாரிகள் மூலம் மணல் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை.

எனவே, மதிப்பீட்டு சான்று பெறாத எம்சாண்ட் குவாரிகளுக்கு பொதுப்பணித்துறை சார்பில் கடிதம் எழுதியுள்ளது. அதன்பேரில், தற்போது தூத்துக்குடி, தேனி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 70 குவாரிகள் மதிப்பீட்டு சான்று கேட்டு விண்ணப்பித்தது. இந்த குவாரிகளில் சம்பந்தபட்ட மாவட்ட செயற்பொறியாளர்கள் நேரில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, அந்த குவாரிகளில் இருந்து தயாரிக்கப்படும் மணலை பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த பரிசோதனை முடிவில் 70 குவாரிகளுக்கு பொதுப்பணித்துறை அழைப்பு விடுத்துள்ளது. அந்த குவாரிகளுக்கு சான்று வழங்குவது தொடர்பாக பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராஜா மோகன்,

இணை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் தலைமையில் பிப்ரவரி 11ம் தேதி தொழில்நுட்ப குழு கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், தமிழக அரசின் கட்டுபாட்டில் உள்ள நெடுஞ்சாலை, வீட்டு வசதி வாரியம், மின்வாரியம், மத்திய அரசு நிறுவனங்களான மிலிட்டரி இன்ஜினியரிங் சர்வீஸ், மத்திய ஆராய்ச்சி நிறுவனம், இந்திய தரக்கட்டுபாட்டு நிறுவனம், அகில இந்திய கட்டுனர் சங்கம், ஐஐடி, அண்ணாபல்கலை பேராசிரியர் உட்பட 14 பேர் கொண்ட குழுவினர் கலந்து கொள்கின்றனர். இக்கூட்டத்தில், இதுவரை மதிப்பீட்டு சான்று கேட்டு விண்ணப்பிக்காத குவாரிகள் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கலாம் என்பது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : state ,Emsand , Of the 1200 Emsand quarries operating across the state, only 270 quarries are certified to produce the original M-Sand.
× RELATED ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிப்பு;...