×

இந்தியாவில் சாலை விபத்திற்கு 73% அதிவேகமாக வாகனங்களை இயக்குவதே காரணம்: தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கோரிக்கை

சென்னை: இந்தியாவில் அதிகமாக சாலை விபத்துக்கள் நடப்பதற்கு வேகமாக வாகனங்களை இயக்குவதாலேயே ஏற்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டில் நடந்த விபத்துக்களில் 73 சதவீதம் அதிவேகமாக வாகனங்களை இயக்கியதாலேயே நடந்துள்ளது. எனவே இதை தடுப்பதற்கு பிரத்தியேக கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 2 கோடியே 77 லட்சத்து 36 ஆயிரத்து 915 வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. இதில் கடந்த ஆண்டில் மட்டும் மாநிலம் முழுவதும் 14 லட்சத்து 92 ஆயிரத்து 196 வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற காரணங்களினால் அனைத்து சாலைகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மற்றொருபுறம் விபத்துக்கள் அதிகமாக நடப்பதற்கும் வழிவகை செய்கிறது.

இதற்கு வாகனங்களை இயக்கும் பலரும் போக்குவரத்துத்துறையின் விதிமுறைகளை கடைபிடிப்பதில் அலட்சியம் காட்டி வருகின்றனர். குறிப்பாக ஹெல்மெட் அணியாதது, சீல் பெல்ட் அணியாமல் வாகனத்தை இயக்குவது. மொபைலில் பேசிக்கொண்டும், மது அருந்திவிட்டும் பயணிப்பது. அதிவேகத்தில் வாகனத்தை செலுத்துவது போன்ற காரணத்தினால், இவ்வாறு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனால் பலரும் கை, கால்களை இழக்கின்றனர். இன்னும் சிலர் விலைமதிப்பற்ற தங்களது உயிரையும் இழக்கின்றனர். எனவே இதைக்கட்டுப்படுத்துவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்ஒருபகுதியாக ஹெல்மெட் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, சேலம் போன்ற மாநிலத்தின் முக்கியமான நகரங்களில் கடுமையான சோதனையில் போக்குவரத்துத்துறை போலீசார் ஈடுபடுகின்றனர்.

ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதேபோல் மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குவோர், அதிவேகமாக வாகனத்தை இயக்குவது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் சென்ற 2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020ம் ஆண்டில் விபத்து மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்பு குறைந்துள்ளது. அதாவது கடந்த 2019ம் ஆண்டில் ஜனவரி முதல் நவம்பர் வரையில் மொத்தமாக 53 ஆயிரத்து 167 விபத்துக்கள் நடந்திருந்தது. இதில் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய விபத்துக்கள் 9 ஆயிரத்து 125 ஆகும்.மேலும் இதில் சிக்கி 9 ஆயிரத்து 797 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவே கடந்த 2020ம் ஆண்டில் ஜனவரி முதல் நவம்பர் வரையில் மொத்தமாக 47 ஆயிரத்து 725 விபத்துக்கள் நடந்துள்ளன.

இதில் 6 ஆயிரத்து 830 உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய விபத்துக்கள் ஆகும். மேலும் இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 287 ஆகும். கடந்த 2019ம் ஆண்டில் நடந்த உயிரிழப்புகளுடன் 2020ம் ஆண்டு நடந்த உயிரிப்புகளை ஒப்பிடுகையில் 25.62 சதவிகிதம் குறைந்துள்ளது. இருப்பினும் அதிக விபத்துக்கள் நடப்பதற்கான காரணங்களில் முக்கியமானதாக அதிவேகமாக வாகனங்களை இயக்குவதே உள்ளது. இவ்வாறு அதிவேகமாக வாகனங்களை இயக்குவதால் மட்டும் 73.5 சதவீத விபத்துக்கள் கடந்த 2019ம் ஆண்டில் நடந்துள்ளது. எனவே இதற்கு பிரத்தியேக கவனம் செலுத்தி விபத்தை குறைக்க போதுமான நடவடிக்கைகளை போக்குவரத்துத்துறை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : road accidents ,India , 73% of road accidents in India are caused by speeding vehicles: Demand for preventive measures
× RELATED குற்ற பின்னணியில் உள்ளவர்களை...