சினிமா பாணியில் சேசிங் செய்தபோது கடத்தல்காரர்கள் தன்னை சுட்டதை வீடியோ எடுத்த வனத்துறை அதிகாரி: ம.பி.யில் நெகிழ்ச்சி சம்பவம்

இந்தூர்: மத்திய பிரதேசத்தில் மரம் கடத்தியவர்களை சினிமா பாணியில் விரட்டி சென்றபோது தான் சுட்டு கொல்லப்படுவதை வனத்துறை அதிகாரி படம் எடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. மத்திய பிரதேசத்தின் திவாஸ் மாவட்டத்தில் வனத்துறை அதிகாரியாக மதன்லால் வர்மா கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். கடந்த வியாழக்கிழமை ஆய்வுக்காக காட்டிற்குள் சென்ற அவர், சோதனைச் சாவடிக்கு திரும்பவில்லை. மறுநாள், சக அதிகாரிகள் அவரைத் தேடி சென்றபோது, சோட்டி தலாய் அருகே சடலமாக கிடந்தார்.  

அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய அதிகாரிகள், அங்கு சிதறி கிடந்த அவரது செல்போனை கைப்பற்றினர். அதில், திடுக்கிடும் வீடியோ பதிவு ஒன்றை அவர்கள் கண்டனர். 66 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில், மரக்கடத்தல் கும்பல் ஒன்றை சினிமா பாணி சேசிங்கில் விரட்டி கொண்டு செல்வது, அப்போது சுடு, சுடு என்ற சத்தம் கேட்டதும், ஒருவன் துப்பாக்கியை எடுத்து அவரை சுடுவது, அதன் பின்பு பைக்கில் இருந்து தடுமாறி மதன்லால் கீழே விழுவது உள்ளிட்ட காட்சிகள் பதிவாகி இருந்தன.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் இந்த வீடியோவை சாட்சியாக கொண்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து திவாஸ் வன அலுவலர் பி.என். மிஸ்ரா கூறுகையில், ``கடத்தல்காரர்களை மதன்லால் விரட்டி சென்ற போது, துப்பாக்கியை எடுத்த போதும் பின்வாங்காமல் அவர்களை துரத்தி உள்ளார். அவரது வீரத்தை நினைவுபடுத்தும் வகையில், ரதன்புரா ஓய்வு இல்லத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்கப்படும். அரசின் நிதி உதவி ₹10 லட்சம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும்,’’ என்றார்.

Related Stories:

>