×

ஸ்ரீவில்லிப்புத்தூர், மேகமலை புலிகள் சரணாலயமாக மாற்றம்: மத்திய அரசு அங்கீகாரம்

புதுடெல்லி: ஸ்ரீவில்லிப்புத்தூர், மேகமலை வனப்பகுதிகளை புலிகள் சரணாலயமாக மாற்ற மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே களக்காடு முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை மற்றும் சத்தியமங்கலம் ஆகியவை புலிகள் காப்பகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஸ்ரீவில்லிப்புத்தூர், மேகமலை வனப்பகுதிகளையும் புலிகள் சரணாலயங்களாக மாற்றுவதற்கான சாத்தியங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக, கடந்த 7 ஆண்டுகளாக தகவல்களும், ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டு வந்தன. இரண்டு சரணாலயங்களிலும் புலிகளின் காலடித் தடங்கள் முதல் மரபணு ஆராய்ச்சி வரை பல்வேறு ஆதாரங்கள் தொகுக்கப்பட்டன. இங்கு 3 ஆண் புலிகளும், 11 பெண் புலிகளுமாக மொத்தம் 14 புலிகள் வசிப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

புலிகளுக்கு இரையாக புள்ளிமான்கள், காட்டெருமைகள், காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட பல்வேறு வகையிலான பாலூட்டிகளும் அதிக எண்ணிக்கையில் இருப்பதும், புலிகள் சரணாலயமாக அமைப்பதற்கான சாத்தியத்தை அதிகரித்துள்ளது.
இவற்றை ஆய்வு செய்த பிறகு கடந்த ஜனவரி 7ம் தேதியன்று இது குறித்த கடிதத்தை தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுப்பியது. ஜனவரி 22ம் தேதியில் தொழில்நுட்பக்குழு ஆலோசனையும் நடைபெற்றது. தொடர்ந்து தற்போது ஸ்ரீவில்லிப்புத்தூர், மேகமலை சரணாலயங்களை புலிகள் காப்பகமாக மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. மேகமலை வனவிலங்குகள் சரணாலயம் தேனி மற்றும் மதுரை மாவட்டங்களுக்கு விரிந்துள்ளது. ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருக்கும் அணில்கள் சரணாலயமானது கேரளாவின் முல்லை பெரியாறு பகுதி வரையிலும் அமைந்துள்ளது.

* தற்போது தமிழகத்தின் ஐந்தாம் புலிகள் சரணாலயமாகவும், இந்தியாவின் 51-வது புலிகள் சரணாலயமாகவும் ஸ்ரீவில்லிப்புத்தூர், மேகமலை சரணாலயங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் ஒரு லட்சம் ஹெக்டேர் பகுதி, 63 வகையான பாலூட்டிகள், 323 வகை பறவையினங்கள் பாதுகாக்கப்படும்.
* கடைசியாக 6 ஆண்டுகளுக்கு முன்பு அருணாசாலப்பிரதேசத்தின் காம்லாங் பகுதி புலிகள் சரணாலயமாக அங்கீகரிக்கப்பட்டது.

Tags : Srivilliputhur ,Meghamalai Tiger Reserve: Central Government Recognition , Transformation of Srivilliputhur, Meghamalai Tiger Reserve: Central Government Recognition
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன்...