×

திருநின்றவூரில் 8 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் ஆடுதொட்டி: ரூ.20 லட்சம் மக்கள் வரிப்பணம் வீண்

ஆவடி: திருநின்றவூர் பேரூராட்சி கன்னிகாபுரம் 10வது வார்டில் நவீன ஆடு அடிக்கும் ஆடு தொட்டி கூடம் ஆவடி முன்னாள் எம்எல்ஏவும், அமைச்சருமான எஸ்.அப்துல்ரகீம் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.20 லட்சத்தில் அனைத்து வசதியுடன் கட்டப்பட்டது. இங்கு திருநின்றவூரை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் இறைச்சி கடைக்காரர்கள் ஆடுகளை கொண்டு வந்து மருத்துவ பரிசோதனைக்குப்பின் வெட்டி எடுத்துச்செல்ல வேண்டும். இவ்வாறு சோதனை செய்து அனுப்பப்படும் ஆடுகளுக்கு பேரூராட்சி முத்திரை குத்தப்படும். அந்த இறைச்சியைத்தான் வியாபாரிகள் கடைகளில் விற்க வேண்டும்.

இந்த ஆடு தொட்டி கூடம் கட்டி முடிக்கப்பட்டு, 8 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை திறக்கவில்லை. இதனால் திருநின்றவூர், நடுக்குத்தகை, நத்தம்பேடு, கொட்டாம்பேடு, பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் சுகாதாரமற்ற முறையில் ஆட்டிறைச்சி விற்கப்படுகிறது. இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “திருநின்றவூர் பகுதியில் கடை அருகிலேயே தெருவோரம் சுகாதாரமற்ற சூழ்நிலையில் வியாபாரிகள் ஆடுகளை அறுக்கின்றனர். மேலும், வீடுகளில் வைத்து வெட்டியும் கடைகளுக்கு எடுத்து வருகின்றனர். இப்படி விற்பனை செய்யப்படும் இறைச்சியை சாப்பிடுகிறவர்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற நோய்களுக்கு ஆளாகின்றனர்.

இதனையடுத்து, கட்டி முடிக்கப்பட்ட நவீன ஆட்டு இறைச்சி கூடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அப்போது தான் இறைச்சி கடைக்காரர்கள் ஆடுகளை கொண்டு வந்து சுகாதாரமான முறையில் வெட்டி எடுத்து சென்று விற்பனை செய்ய ஏதுவாக இருக்கும். இதனால் பேருராட்சிக்கும் அதிக வருமானம் கிடைக்கும். இது தொடர்பாக பேரூராட்சி உயர் அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அனுப்பியும் பலனில்லை. இதனால் மக்கள் சுகாதாரமற்ற ஆட்டிறைச்சியை சாப்பிட்டு நோய் கொடுமைக்கு தொடர்ந்து ஆளாகின்றனர். எனவே, இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருநின்றவூர், கன்னிகாபுரத்தில் உள்ள ஆடு அடிக்கும் கூடத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Tags : Thiruninravur , Goat tank locked up for 8 years in Thiruninravur: Rs 20 lakh people's tax money wasted
× RELATED திருநின்றவூரில் துணிகரம் வீட்டின் கதவை உடைத்து 16 சவரன் நகை கொள்ளை