×

செயற்கைக்கோள் ஏவும் திட்டத்தில் திருப்போரூரை சேர்ந்த பள்ளி மாணவி தேர்வு

திருப்போரூர்: ராமேஸ்வரத்தில் 100 சிறிய வகை செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்படும் நிகழ்ச்சியில், திருப்போரூர் மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பில், இந்திய பாதுகாப்புத்துறை அனுமதியுடன் இன்று ராமேஸ்வரத்தில் 100 சிறிய வகை செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்படுகின்றன. இதில் பங்கேற்க தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் 100 சிறந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதையொட்டி, திருப்போரூர் ஒன்றியம் அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்த ரவி-தேவி தம்பதியின் மகள் ஷர்மிளா, செயற்கைக்கோள் ஏவும் நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்டார். மாணவி ஷர்மிளா சிங்கப்பெருமாள் கோயில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கிறார். முன்னதாக இந்த செயற்கைக் கோள் ஏவுதல் குறித்த செயல் விளக்கமுறை, ஆன்லைன் மூலம் மாணவிக்கு கற்பிக்கப்பட்டது. மாணவி பங்கேற்கும் செயற்கைக்கோள்கள் ஏவும் திட்டத்தின் மூலம் விவசாயம், கதிர்வீச்சு, காற்றின் வேகம், புவி வெப்பமடைதல், ஓசோன் பற்றாக்குறை ஆகிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.

Tags : Thiruporur , Selection of a school student from Thiruporur in the satellite launch program
× RELATED செங்கை கலெக்டர் துவக்கி வைத்தார்;...