×

ரவுடி ஸ்ரீதரின் மகள் மீதான சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கை ரத்து செய்ய முடியாது: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: காஞ்சிபுரம் பிரபல ரவுடி ஸ்ரீதரின் மகள் மீதான சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதர் மீது கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் இருந்து தப்பிக்க ஐக்கிய அரேபிய அமீரகத்துக்கு சென்ற ஸ்ரீதர் 2017ம் ஆண்டு மரணமடைந்தார். முன்னதாக குற்றச்செயல்கள் மூலம் பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்துக்களை வாங்கி குவித்ததாக ஸ்ரீதர், அவரது மனைவி, மகள் உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கப்பிரிவு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஸ்ரீதரின் மகள் தனலட்சுமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது,, தனலட்சுமி தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த சொத்துக்கள் பற்றி மனுதாரருக்கு எதுவும் தெரியாது என வாதிட்டார். அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுதாரர் பெயரில் உள்ள ரூ.19 கோடி மதிப்பிலான சொத்துக்கள் குற்றச்செயல்களின் மூலம் சம்பாதித்தவை என்பதை அமலாக்கப் பிரிவு நியாயப்படுத்தியுள்ளது. எனவே, வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. சொத்து சேர்க்கும் எண்ணத்துடன் இன்று பலர் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். அதை தடுக்கும் பொருட்டு, கடுமையான எச்சரிக்கையை விடுக்கும் வகையில் சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டம் உள்ளது என உத்தரவிட்டனர்.

Tags : Rowdy Sreedhar ,Chennai iCourt , Rowdy Sreedhar's daughter's money laundering case cannot be quashed
× RELATED ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை...