கோவிட் தடுப்பூசி போடுவதற்கு யாருக்கும் அச்சம் வேண்டாம்: சுகாதாரத் துறை செயலாளர் தகவல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோவிட்-19  தடுப்பூசி போடும் மையத்தை சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், கலெக்டர் அ.ஜான்லூயிஸ் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, கோவிட் தடுப்பூசி போட்டுகொண்டார். செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவை கட்டுபடுத்த சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு துறை வழிகாட்டுதல்படி, முதல்கட்டமாக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை, குரோம்பேட்டை, தாம்பரம் அரசு மருத்துவமனை, நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் என 3 இடங்களில், கொரோனா தடுப்பூசி முன்களப் பணியாளர்களான, டாக்டர், செவிலியர், தூய்மை  பணியாளர்களுக்கு போடப்பட்டது.

மேலும், கூடுவாஞ்சேரி அடுத்த நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த 400 மாணவர்களுக்கு இந்த தடுப்பூசி போட திட்டமிட்டு, தினமும் 50 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதனை அவர்கள் பார்வையிட்டனர். பின்னர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் கூறியதாவது. தமிழ்நாட்டில் தற்போது 440 கோவிட் தடுப்பூசி போடும் மையங்கள் செயல்படுகிறது. இந்த மையங்களின் மூலம் 1.57 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தேவையான தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேவைக்கேற்ப, தடுப்பூசி போடும் மையங்கள் அதிகரிக்கப்படும். தடுப்பூசி போட்டு கொள்வதற்கு யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை. அதற்காகவே, செங்கல்பட்டு கலெக்டர் கோவிட் தடுப்பூசி போட்டுகொண்டார் என்றார். செங்கல்பட்டு பொது சுகாதார துணை இயக்குநர் பிரியாராஜ், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை டீன் சாந்திமலர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>