திருப்பூரில் தீராத கோஷ்டி பூசல் சட்டமன்ற தேர்தலை பாதிக்குமா? அதிமுக தலைமை கவலை

திருப்பூர் அதிமுகவில் ஏற்பட்டுள்ள கோஷ்டி பூசல், சட்டமன்றத் தேர்தலை கடுமையாக பாதிக்குமா? என்ற அச்சத்தில் அக்கட்சி தலைமை உள்ளது. திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக, முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் இருந்தபோது, அவரால் பல பதவிகளை அடைந்த சிலரே, அவருக்கு எதிராக திரும்பி உள்ளடி வேலைகளை ஆரம்பித்தனர். பல இடங்களில் அவரை எதிர்த்து பிரச்னைகளில் ஈடுபட்டனர். மேலும், அவர் குறித்து இல்லாததும், பொல்லாததுமாக கட்சி தலைமைக்கு போட்டுக்கொடுத்தனர். இதன் பலனாக அவரிடம் இருந்த மாநகர் மாவட்ட செயலாளர் பதவி பறிபோனது. துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மாநகர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இதனால் கோஷ்டி பூசல் முடிவுக்கு வரும் என எதிர்பார்த்த தலைமைக்கு, மேலும், ஒரு கோஷ்டி உருவானது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது, கட்சி சார்பில் நடைபெறும் எந்த நிகழ்ச்சிகளாக இருந்தாலும், ஒரு கோஷ்டியை மற்றொரு கோஷ்டி புறக்கணிப்பது, கோஷ்டி தலைவர்களை அலட்சியப்படுத்துவது என அவரவர் ஆதரவாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். இதனால் அவர்களிடையே நாளுக்கு நாள் விரிசல் அதிகமாகி வருவது சாதாரண தொண்டர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது. கோஷ்டி பூசல் குறித்து, கட்சி தலைமைக்கு தகவல் சென்றுள்ள நிலையில், சட்டமன்ற தேர்தலை அது கடுமையாக பாதிக்கும் என்ற அச்சத்தில் அக்கட்சி தலைமை உள்ளதாக, எந்த கோஷ்டியையும் சேராத கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>