குடும்பத்தையே கொலை செய்து விடுவோம் என அதிமுக எம்பியின் மருமகன் மிரட்டலால் வாலிபர் தற்கொலை: ஒரத்தநாடு அருகே பரபரப்பு

ஒரத்தநாடு: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே புதூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவரது மகன் வினோத்குமார் (32). தந்தையும் மகனும் தஞ்சையில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வந்தனர். இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் குணசேகரன். இவரது மகன் டாக்டர் கார்த்தி, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், எம்பியுமான வைத்திலிங்கத்தின் மகளை திருமணம் செய்துள்ளார். கோவிந்தராஜனுக்கும், குணசேகரனுக்கும் நீண்ட நாட்களாக இடப்பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்படும். நேற்றுமுன்தினமும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது கார்த்தி, வினோத்குமாரையும், அவரது தந்தை கோவிந்தராஜனையும் தாக்கியுள்ளார்.

அப்போது கார்த்தி உங்கள் குடும்பத்தில் உள்ள 4 பேரையும் கொல்லாமல் விட மாட்டோம் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை எழுந்து பார்த்த போது, வினோத்குமார் தனது அறையில் வேட்டியில் தூக்குப்போட்டு சடலமாக தொங்கியது தெரிந்தது. கொலை மிரட்டலால் ஏற்பட்ட மன உளைச்சலில் வினோத்குமார் தற்கொலை செய்துகொண்டதாகவும் இதற்கு காரணமான அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் கோவிந்தராஜன் குடும்பத்தினர் போலீசாரிடம் கூறினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

>