×

அரை அதிமுக, அரை பாஜக தமிழகத்தில் நடப்பது அரைகுறை ஆட்சி: நாகர்கோவிலில் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

நாகர்கோவில்: தமிழகத்தில் அரை அதிமுக, அரை பாஜ என்ற வகையில் அரைுறை ஆட்சி நடக்கிறது என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் குமரி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை  மனுக்களை பெற்றுக்கொண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட குழப்பங்களை பயன்படுத்தி திமுக ஆட்சி அமைத்து விடும் என பலர் கூறினார்கள். அதிமுகவில் இருந்தே பலர் எனக்கு தூது விட்டார்கள். அப்படி யார் யார் தூது விட்டார்கள் என நான் சொல்ல விரும்பவில்லை. அது நாகரீகமும் அல்ல. அவர்களின் மனசாட்சிக்கு இது தெரியும்.
 
அப்படி ஆட்சி அமைத்து இருந்தால் அது கழக அரசாக, கலைஞர் ஆட்சியாக அமைந்து இருக்காது. அப்படி முதலமைச்சராக விரும்பாதவன் நான். கோடிக்கணக்கான மக்களால் வாக்களிக்கப்பட்டு கழக அரசு அமைய வேண்டும் என்பதுதான் எனது குறிக்கோள், எனது நோக்கம். அப்படி அமையக்கூடிய ஆட்சி தான் முழுமையான மக்கள் ஆட்சியாக அமையும். அப்படி ஒரு ஆட்சி தான் விரைவில் அமையப்போகிறது. இன்று நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது முழுமையான ஆட்சி அல்ல. அரை அதிமுக, அரை பாஜ ஆட்சி. அரைகுறை ஆட்சி என்று சொல்வார்கள் இல்லையா, அதுபோன்று ஆட்சி. அதனால்தான் எல்லாவற்றிலும் அரைகுறையாக செயல்பட்டு வருகிறார்கள்.

நீட்  தேர்வு ரத்து என தீர்மானம் போடுவார்கள், ஆனால் நீட் தேர்வு இருக்கும். 7 பேர் விடுதலையா? தீர்மானம் போடுவார்கள், ஆனால் 7 பேர் விடுதலையாக மாட்டார்கள். இருமொழி கொள்கையா? தீர்மானம் போடுவார்கள், ஆனால் இந்தி  திணிப்பு இருந்துகொண்டே இருக்கும். மாநில உரிமைகள் பறிப்பது தவறு என்று நடிப்பார்கள், ஆனால் உரிமைகள் கிடைக்காது. மாநிலத்துக்கு நிதி கேட்டு மனு கொடுப்பார்கள், ஆனால் நிதி கிடைக்காது. ஏராளமான கோரிக்கைகளை பிரதமரிடம்  வைப்பார்கள், ஆனால் பிரதமர் எதனையும் நிறைவேற்ற மாட்டார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவார்கள், ஆனால் ஒரு செங்கல் கூட அங்கு வைக்க மாட்டார்கள்.

பழனிசாமி தன்னை முதல்வர் என சொல்லிக்கொள்வார். ஆனால், அவரது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் கூட அவரை மதிக்க மாட்டார்கள். பழனிசாமி தனது கட்டுப்பாட்டில் அதிமுக இருப்பதாக காட்டிக்கொள்வார் ஆனால் அவரை பன்னீர்செல்வம் கூட வழிமொழியமாட்டார். இப்படி ஒரு ஆட்சி, கட்சி நடந்து கொண்டிருக்கிறது. எல்லாவற்றிலும் அரைகுறையாகத்தான் இன்று  செயல்பாடுகள் நடந்து வருவதை பார்க்கிறோம். அதிமுக அரசு நாட்டையே கெடுத்து வருகிறது. எனவே இந்த அரைகுறை ஆட்சிக்கு முடிவு கட்ட திமுகவுக்கு முழு வெற்றியை தாருங்கள்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேறும். இந்த பெட்டியை நான் சென்னைக்கு எடுத்து செல்கிறேன் என்றால் பெட்டியை கொண்டு செல்கிறேன் என நினைக்காதீர்கள், உங்கள் இதயங்களை கொண்டு செல்கிறேன் என்று அர்த்தம். உங்கள் இதயங்களை குளிர்விக்கும் ஆட்சியாக கழக ஆட்சி அமையும் என இந்த கடல் நகரில் இருந்து நான் உறுதி எடுக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். நெல்லை மாவட்டம் வீரவநல்லூரை அடுத்த வெள்ளாங்குழியில் நேற்று மாலை உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி நடந்தது.

இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்; இன்றைக்கு முதல்வராக இருப்பவர் பச்சை துண்டு பழனிசாமி அல்ல, பச்சை துரோகி பழனிசாமி. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரல்ல. மண்புழு போன்று ஊர்ந்து சென்று நெளிந்து தவழ்ந்து, கவிழ்ந்து முதல்வர் பதவியை பெற்றவர். ஆனால் தற்போது பதவியை தந்த சசிகலாவையே காலை வாரிவருகிறார். இன்னும் இரண்டு நாளில் என்ன நடக்கப்போகிறது என்று பாருங்கள். நம்பிக்கை துரோகி, இந்த பச்சை துரோகி பழனிசாமியின் ஆட்டம் முடியபோகிறது என்றார்.

* முதல்வர் அறைக்குள்ளேயே வரலாம்
மு.க.ஸ்டாலின் பேசுகையில், நீங்கள், பிரச்னைகள் 100 நாளில் முடியும் என்ற உறுதியான நம்பிக்கையோடுதானே வந்துள்ளீர்கள். நீங்கள் பதிவு செய்தபோது ஒரு அடையாள அட்டை கொடுத்தார்களா? இது முக்கியம். இதற்கு பல உரிமைகள் இருக்கிறது. தேர்தல் நடந்து, பிறகு முடிவு வந்து, திமுகதான் ஆட்சி என்பது உறுதியாகி, நமது கட்சி கேபினட் பொறுப்பு எடுத்துவிட்டு கோட்டையில் உட்கார்ந்த பிறகு 100 நாட்களில் மனுக்கள் மீது ஏதும் நடக்கவில்லை, அதில் சந்தேகம் இருந்தால் இந்த அட்டை இருந்தால் நீங்கள் உரிமையாக கோட்டைக்குள் வரலாம். முதல்வர் அறைக்குள்ளும் வரலாம். எனவே இதனை இழந்துவிடாதீர்கள் என்றார்.

* தமிழக அரசின் அடுத்த அறிவிப்பு என்ன தெரியுமா?
மு.க.ஸ்டாலின் பேசுகையில்,‘5 பவுன் வரை கூட்டுறவு வங்கி கடன் வட்டியில்லாமல் தள்ளுபடி செய்வோம் என்று நான் உறுதிமொழி கொடுத்துள்ளேன். அதனையும் அடுத்து முதல்வர் பழனிசாமி அறிவிக்க போகிறார். யார் ஆளும்கட்சி, யார் எதிர்கட்சி என்பதே தெரியவில்லை. நாம் சொல்வதைத்தான் பழனிசாமி கேட்கிறார். நான் சொல்வதை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறார். அவருக்கு ஒட்டுமொத்த தமிழக மக்களும் மரண அடி கொடுக்க போகிறார்கள்’ என்றார்.

Tags : BJP ,Tamil Nadu ,Nagercoil ,MK Stalin , Half AIADMK, half BJP half rule in Tamil Nadu: MK Stalin's accusation in Nagercoil
× RELATED பூசாரிகளின் பணத்தை கொள்ளையடித்த...