×

தேர்தல் தேதி அறிவிக்காத நிலையில் 5 மாநிலங்களுக்கு அடுத்தடுத்து பயணம்: அரசு விழாக்கள் மூலம் மோடியின் பிரசாரம் தொடங்கியது...நாளை அசாம், மேற்குவங்கம்; பிப். 14ல் தமிழகம் வருகை

புதுடெல்லி: தேர்தல் அட்டவணை வெளியாகாத நிலையில் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தனது தேர்தல் பிரசாரத்தை அரசு விழாக்கள் மூலம் பிரதமர் மோடி தொடங்கியுள்ளார். நாளை அசாம், மேற்குவங்கத்திற்கு செல்லும் அவர், வரும்  14ம் தேதி தமிழகம் வரவுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவல் கடந்த 2020 மார்ச்சில் தொடங்கியதில் இருந்து பிரதமர் மோடி, வெளியூர் பயணங்களை முற்றிலும் தவிர்த்து வருகிறார். பெரும்பாலான அரசு நிகழ்ச்சிகள் காணொலி  காட்சி மூலமே நடைபெற்று வருகின்றன.

ஊரடங்கு தளர்வுகள் பெரும்பாலும் தளர்த்தப்பட்டாலும் கூட, மோடி இன்னும் வழக்கமான அரசு நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் திறந்தவெளியில் பங்கேற்கவில்லை. அதேசமயம் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்து முடிந்த பீகார் தேர்தல்  பிரசாரத்தில் மட்டும் பங்கேற்றார். அதேபோல் தனது சொந்த மாநிலமான குஜராத், எம்பி தொகுதி மாநிலமான உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் நடந்த நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.
கிட்டதிட்ட கடந்த ஓராண்டாக எந்தவொரு வெளிநாட்டு பயணத்தையும் மேற்கொள்ளவில்லை.

நிலைமை இவ்வாறு இருக்க வரும் மார்ச், ஏப்ரல் மாதங்கள் வாக்கில் மேற்குவங்கம், தமிழ்நாடு, அசாம், கேரளா, புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் ேமற்கண்ட மாநிலங்களுக்கு தனது பிரசார  பயணத்தை மோடி தொடங்கி உள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன் மேற்குவங்கம் ெசன்ற அவர், அங்கு நடந்த அரசின் நலத்திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த விழாவில் அம்மாநில முதல்வர் மம்தாவும் பங்கேற்றார். ஆனால், பாஜக  ஆதரவாளர்கள் ‘ஜெய் ராம்’ என கோஷம் எழுப்பியதால் அந்த நிகழ்ச்சியில் மம்தா பேச மறுத்துவிட்டார்.

அரசு நிகழ்ச்சியில் முதல்வர் மம்தாவை பாஜகவினர் அவமதித்துவிட்டதாக குற்றசாட்டுகள் முன் வைக்கப்பட்டன. மேற்குவங்கத்தை பொருத்தமட்டில் ஆளும் திரிணாமுல் கட்சியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர பாஜக பல்வேறு  வியூகங்களை வகுத்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. அம்மாநிலத்தில் திரிணாமுல் கட்சியை சேர்ந்த கிட்டத்திட்ட 120க்கும் மேற்பட்ட முன்னணி தலைவர்கள் பாஜகவில் ஐக்கியமானதால், ஆளுங்கட்சிக்கு அரசியல் ரீதியாக நெருக்கடி  ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை பிரதமர் மோடி அசாம் மற்றும் மேற்குவங்க மாநிலங்களுக்கு செல்கிறார்.

அசாமில் இரண்டு மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா, மேற்குவங்கம் ஹால்டியாவில் முக்கிய கட்டமைப்பு திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். அதேபோல், வரும் 14ம் தேதி பிரதமர் மோடி தமிழகம்  வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரின் தமிழகப் பயணத்தின்போது வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைப்பதோடு, காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கும் அடிக்கல்  நாட்டுவார் எனத் தெரிகிறது.

கொரோனா ஊரடங்குக்குப் பிறகு மோடி முதல் முறையாக தமிழகம் வருகிறார் என்பதால், தமிழகத்தில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 5 மாநில தேர்தல் அட்டவணை வெளியாகத நிலையில், அரசு விழாக்களை  மையப்படுத்தி பிரதமர் மோடி தனது தமிழகம் உட்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரசார பணியை தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.  கடந்த பிப். 1ம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூட,  மேற்கண்ட 5 மாநிலங்களுக்கும் பல திட்டங்களை அறிவித்து கூடுதல் நிதியை ஒதுக்கி உள்ளார் என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இதுதொடர்பாக சிவசேனா கட்சி வெளியிட்ட அறிக்கையில், ‘மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் தேர்தல் நடக்கும் மாநிலங்களை மனதில் வைத்து, வாக்குகளைக் கவரும் நோக்கில் தயாரிக்கப்பட்டது. அசாம், கேரளா, தமிழகம், மேற்கு  வங்கம் ஆகிய தேர்தல் நடக்கும் மாநிலங்களை மையமாக வைத்து சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. தேர்தலில் மக்களின் வாக்குகளைக் கவர பட்ஜெட்டைக் கருவியாக மத்திய அரசு பயன்படுத்துவது பொருத்தமானதா? தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்குச் சலுகைகளை, திட்டங்களை பட்ஜெட்டில் வழங்கிய மத்திய அ ரசு மகாராஷ்டிர மாநிலத்தைப் புறக்கணித்துவிட்டது. பழிவாங்கும் மனநிலையில் மத்திய அரசு மகாராஷ்டிராவை அணுகியுள்ளது தெரிகிறது.  தேர்தல் நடக்காத மாநிலங்களுக்கு அல்லாத பட்ஜெட்டாகவே இருக்கிறது. கிணற்றில் ஒரு சொட்டு நீர் கூட ஊற்றாதவர்கள், மக்களுக்குக் குடம் குடமாக நீர் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : states ,tour ,state ceremonies ,campaign ,Modi ,Assam ,Tamil Nadu ,West Bengal , Successive tour of 5 states without announcing election date: Modi's campaign begins with state ceremonies ... Tomorrow Assam, West Bengal; Feb. Visit to Tamil Nadu on the 14th
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்