கட்சிக்காரனுக்கு உதவாத அமைச்சருக்கு தேர்தலில் வேலை செய்ய மாட்டோம்: மதுரை அதிமுக தொண்டர்கள் குமுறல்

மதுரை: மதுரை மாநகர், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு என 3 மாவட்டமாக மதுரை மாவட்ட அதிமுக பிரிக்கப்பட்டுள்ளது. மாநகரில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. மாநகர் மாவட்ட செயலாளராக அமைச்சர் செல்லூர் ராஜூ கடந்த 2007 முதல் இருந்து வருகிறார்.

மாநகரில் உள்ள வார்டுகளில், வட்ட செயலாளர், பிரதிநிதி, துணை, இணை செயலாளர்கள், பகுதிச் செயலாளர், மாநகர் மாவட்ட அவைத்தலைவர் என பல கட்சி பதவிகள் காலியாக உள்ளன. இதுவரை இப்பதவிகளுக்கு என யாரையும் முன்பு நியமிக்கப்படவில்லை. கட்சியில் உண்மையாக உழைத்த பெண் தொண்டர்கள் உட்பட பலர் பதவி கேட்டு, மனு கொடுத்து காத்திருக்கின்றனர்.  

அவர்களுக்கு பதவி கொடுக்காமல், தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சிபாரிசு செய்தவர்களுக்கு கட்சி பதவிகளை, அமைச்சர் தன்னிச்சையாக கொடுத்து வருகிறார் என உண்மைத் தொண்டர்கள் புலம்பி வருகின்றனர்.இது குறித்து தொண்டர்கள் கூறுகையில், ‘‘மாவட்டச் செயலாளராகவும், அமைச்சராகவும் செல்லூர் ராஜூ பல வருடமாக இருந்து வருகிறார். ஆனால் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில், கட்சி தொண்டர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க கூறி கட்சி மேலிடம் கொடுக்கும் பணம் கூட முறையாக வந்து சேரவில்லை.

இவருக்காக கடந்த தேர்தலில் இரவு, பகல் என பார்க்காமல் வேலை பார்த்த தொண்டர்களுக்கு இதுவரைக்கும் ஒன்றுமே செய்யவில்லை. இதனால் வரும் தேர்தலில் அவருக்கு ஆதரவாக யாரும் வேலை பார்க்க மாட்டோம். அரசின் நலத்திட்ட உதவிகளும் அவரது ஆதரவாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இப்படிப்பட்ட நபருக்கு, நாங்கள் வேலை செய்ய மாட்டோம் என கட்சி தலைமைக்கு புகாராகவே அனுப்பி இருக்கிறோம்’’ என்று குமுறி வருகின்றனர்.

Related Stories:

>