அமைச்சர் செங்கோட்டையன் ஆபீஸ் உள்பட 5 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் அதிமுக எம்எல்ஏ அலுவலகங்கள்: அதிருப்தியில் ஈரோடு மக்கள்

ஈரோடு: தமிழகத்தில் கடந்த 1996ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் தொகுதி மக்கள் எம்எல்ஏவை சந்திப்பதற்கு வசதியாக ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு எம்எல்ஏ அலுவலகம் கட்டப்பட்டது. இதனால் தொகுதி மக்கள் எம்எல்ஏ க்கள் அலுவலகத்துக்கு நேரில் வந்து குறைகள், கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் கொடுத்தும், எம்எல்ஏக்களை நேரில் சந்தித்தும் தீர்வு கண்டு வந்தனர். இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் மட்டும் நேர் எதிராக அதிமுக எம்எல்ஏக்கள் அலுவலகங்கள் பூட்டியே கிடக்கின்றன. ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அலுவலகம் கடந்த 5 ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கின்றது.

 எம்எல்ஏ தென்னரசை சந்திக்க வேண்டும் என்றால் காலிங்கராயன் விருந்தினர் இல்லத்திற்கு தான் பொதுமக்கள் செல்ல வேண்டிய நிலை. இதே போல அந்தியூர் அதிமுக எம்எல்ஏ அலுவலகம் 10 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கின்றது. எம்எல்ஏ ராஜாகிருஷ்ணனை சந்திக்க வேண்டும் என்றால் அந்தியூரில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு தான் செல்ல வேண்டும். கோபி தொகுதி எம்எல்ஏவும் அமைச்சருமான செங்கோட்டையனின் அலுவலகத்தின் நிலைமையும் இதே தான். இவரை சந்திக்க வீட்டிற்கு போனாலும் அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகள் சந்திக்க விடுவதில்லை என்ற புகார் உள்ளது. பவானிசாகர் எம்எல்ஏ அலுவலகம் புஞ்சைபுளியம்பட்டியிலும், சத்தியமங்கலத்திலும் உள்ளது.

இதில் சத்தியமங்கலம் அலுவலகம் பூட்டியே கிடக்கின்றது. மாவட்டத்தில் மொத்தமுள்ள 8 தொகுதிகளில் 4 தொகுதி எம்எல்ஏக்களின் அலுவலகங்கள் பூட்டியே கிடப்பதால் பொதுமக்கள் தங்களது குறைகளை நேரில் சந்தித்து தெரிவிக்கமுடியாத நிலை உள்ளது. தேர்தல் வரட்டும் இதுக்கு நாங்க தக்க பதிலடி கொடுப்போம் என்கின்றனர் அதிருப்தியில் உள்ள ஈரோடு மக்கள்.

Related Stories:

>