அபுதாபியில் அமைய உள்ள கோயிலில் முருகன் சன்னதி..! தமிழ் அமைப்பு கோரிக்கை

சென்னை: அபுதாபியில் திறக்கப்பட உள்ள மிகப் பிரமாண்டமான கோவிலில் தமிழ்க் கடவுளான முருகப் பெருமானுக்கு என்று தனியாக ஒரு சன்னதி அமைக்க வேண்டும் என்று அபுதாபி வாழ் தமிழர்கள் சார்பில் அபுதாபி தமிழ் மக்கள் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. அபுதாபி இந்தியத் தூதரகத்தில் புதிதாக Deputy Chief of Mission ஆக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் சந்திப் குமாரை தமிழ் மக்கள் மன்றத்தின் தலைவர் சிவக்குமார் தலைமையில், தமிழ் மக்கள் மன்ற நிர்வாகிகள் சந்தித்து உரையாடினர். இதுகுறித்து அபுதாபி தமிழ் மக்கள் மன்றத்தின் பொதுச் செயலாளர் பிர்தோஸ் பாஷா கூறுகையில், பிப்ரவரி 2ம் தேதி புதன்கிழமை இந்த சந்திப்பு நடந்தது. மரியாதை நிமித்தமான இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

இதில் அமீரகத்தில் வாழும் தமிழர்களின் நலன்கள் சம்பந்தமாகப் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தோம்‌. BAPS அமைப்பின் மூலம் அபுதாபியில் திறக்கப்பட உள்ள மிகப் பிரமாண்டமான கோவிலுக்குத் தமிழ்க் கடவுளான முருகப் பெருமானுக்கு என்று தனியாக ஒரு சன்னதி அமைக்க வேண்டுமென்பது அமீரகத்தில் வசிக்கும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களின் கோரிக்கை என்பதைத் தெரியப்படுத்தினோம். கொரானா பேரிடர் காலத்தில் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் பல்வேறு தமிழர்கள் பயன் அடைய உதவி செய்ததற்காகவும், அய்மான் சங்கத்தின் மூலமாகப் பேரிடர் காலத்தில் மூன்று விமானங்கள் இயக்க அனுமதி தந்தமைக்காகவும் நன்றியினைத் தெரிவித்தோம்.

அமீரகத்தில் வசிக்கும் தமிழர்கள் நலனுக்காக இனி வரும் காலங்களில் தென் தமிழகத்திற்கு, குறிப்பாகத் திருச்சி மற்றும் மதுரைக்கு அபுதாபியிலிருந்து தொடர்ச்சியாக நேரடி விமான சேவைகள் இயக்கப்பட வேண்டுமென்றும், இதன் மூலம் அபுதாபி, அல் அயன்‌, மற்றும் ரூவைஸ் பகுதிகளில் வாழும் தமிழர்கள் பெருமளவில் பயனடைவார்கள் என்றும் வணிகப் பொருளாதாரமும் மேம்படும் என்பதையும் எடுத்துச் சொன்னோம். இந்தக் கோரிக்கைகளைக் கனிவுடன் கேட்ட மரியாதைக்குரிய சந்திப்குமார் அவர்கள் நிச்சயமாக விரைவில் அதற்கு நல்ல முடிவைத் தருவதாக எங்களிடம் உறுதியளித்தமைக்கு தமிழர்கள் சார்புல் நன்றி தெரிவித்தோம்.

பேரிடர் காலத்தில் தமிழ் மக்கள் மன்றம் ஆற்றிய அளப்பரிய சேவைகளைப் பற்றியும் எடுத்துரைத்தோம். குறிப்பாகக் கொரோனா காலகட்டத்தில் மட்டுமே 50க்கும் மேற்பட்ட உடல்களைத் தலைவர் சிவகுமார் அவர்கள் தலைமையில் தமிழகத்துக்கு அனுப்பி வைத்ததைக் குறித்தும் தெரிவித்தோம். எங்கள் பணிகளை உணர்ந்த மரியாதைக்குரிய சந்திப்குமார் அவர்கள் தமிழ் மக்கள் மன்ற சேவைகளைப் பாராட்டினார்கள். நிச்சயமாக மிகப்பெரிய அங்கீகாரத்தை வழங்குவதாகவும் தெரிவித்தார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த முக்கியமான சந்திப்பில் தமிழ் மக்கள் மன்றத்தின் தலைவர் சிவகுமார், துணைத்தலைவர்கள் நீலகண்டன் மற்றும் பழனிசாமி, பொதுச் செயலாளர் பிர்தோஸ் பாஷா ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

Related Stories:

>