பிப்.9ல் தை அமாவாசை வழிபாடு சதுரகிரிக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பு குறித்து ஆலோசனை: உசிலம்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தில் நடந்தது

வத்திராயிருப்பு: சதுரகிரியில் பிப்.9ல் தை அமாவாசை வழிபாட்டிற்காக பக்தர்களை பாதுகாப்புடன் அனுமதிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் உசிலம்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தில் நடந்தது. மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரி மலையில் உள்ளது சுந்தரமகாலிங்கம் கோயில். இங்கு அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷ நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். வரும் பிப்.9ம் தேதி தை அமாவாசையையொட்டி பக்தர்களை 4 நாட்கள் தகுந்த பாதுகாப்புடன் அனுமதிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் உசிலம்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தில் நடந்தது. ஆர்டிஓ ராஜ்குமார் தலைமை வகிக்க, பரம்பரை அறங்காவலர் ராஜா, கோயில் செயல்அலுவலர் விஸ்வநாத், பேரையூர் டிஎஸ்பி மதியழகன் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் டி.கல்லுப்பட்டி தீயணைப்பு துறையினர் மலையில் வழுக்கு பாறை, சங்கிலி பாறை, பிலாவடி கருப்பசாமி கோயில் பகுதியில் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது, மாட்டுத்தாவணி முதல் தாணிப்பாறை வரை 200 சிறப்பு பஸ்களை இயக்குவது, அதேபோல் உசிலம்பட்டி முதல் தாணிப்பாறை, வாழைத்தோப்பு வரை போக்குவரத்து வசதிகள் செய்து தருவது, தாணிப்பாறை அடிவாரம், மலையில் சின்ன பசுக்கிடை, கோணதளவாசல், கோயில் வளாக பகுதிகளில் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருப்பது, வனத்துறையினர் கோயிலுக்கு பக்தர்களை காலை 6.30 மணி முதல் மதியம் 1 மணி வரை அனுமதிப்பது, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை பக்தர்கள் கொண்டு செல்ல கூடாது, கோயில் வளாகம், அடிவார பகுதிகளில் சுகாதார பணிகளை மேற்கொள்வது, பக்தர்களின் குடிநீர் தேவைக்காக 5 இடங்களில் தொட்டிகள் அமைப்பது, அடிவாரத்தில் பக்தர்களுக்கு குளியலறை, கழிப்பறை வசதிகளை செய்வது, 10 வயதுக்கு கீழ், 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பாதுகாப்பு கருதி மலையேற வராமல் தவிர்ப்பது என தீர்மானிக்கப்பட்டது. இதேபோல் மார்ச் மாதம் 11ம் தேதி மகா சிவாராத்திரி அன்றும் பக்தர்களுக்கு பாதுகாப்பு வசதிகளை செய்து தர அறிவுறுத்தப்பட்டது.

Related Stories:

>