திண்டுக்கல்: திண்டுக்கல்- கரூர் ரோட்டில் நடந்து வரும் ரயில்வே சுரங்க பாதை பணி ஆமை வேகத்தில் நடந்து வருவதால் வாகனஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திண்டுக்கல் - பழைய கரூர் ரோட்டில் வழிக்காட்டி விநாயகர் கோயில் அருகே ரயில்வே கேட் உள்ளது. இவ்வழியே தினமும் 15க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், நீண்டநேரம் காத்திருந்து செல்ல வேண்டி உள்ளது. இதை தவிர்க்க மேம்பாலம் அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா இந்த இடத்தில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய, மாநில அரசுகள் சார்பில் ரூ.17.45 கோடியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி துவங்கியது. இதற்காக, நேருஜி நகர் ரவுண்டானா முதல் பழைய கரூர் ரோட்டில் உள்ள குடிநீர் வடிகால் வாரியம் அலுவலகம் வரை உள்ள ரோடு மூடப்பட்டது.
நேருஜி நகர் ரவுண்டானா முதல் வழிக்காட்டி விநாயகர் கோயில் வரை 197 மீட்டர், ரயில்வே கேட்டில் இருந்து குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் வரை 132 மீட்டர் என மொத்தம் 329 மீட்டர் நீளம், 7.5 மீட்டர் அகலத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடக்கிறது. இதனால் பழைய கரூர் ரோடு வழியே செல்லும் வாகனங்கள் அனைத்தும் காந்திஜி நகர், கூட்டுறவு நகர், என்ஜிஓ காலனி வழியே செல்கிறது. எனினும் வாகனங்கள் செல்ல இங்கு ரோடு வசதியும் இல்லை.
இதனால் குறுகிய தெருக்களில் உள்ள மேடு, பள்ளமான ரோட்டில் வாகனங்கள் செல்வதால் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. சாலையை சீரமைக்க கோரி 3 ஆண்டுகளாக கோரியும் அதிகாரிகள் செவிசாய்க்கவே இல்லை. இதனால் சுரங்கப்பாதை பணியை எப்போது முடியுமோ என அப்பகுதி மக்களும், வாகனஓட்டிகளும் எதிர்பார்ப்பில் உள்ளனர். எனவே இப்பணியை துரிதமாக முடித்து விரைவில் போக்குவரத்தை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.