×

வாய்க்கால் வெட்டி திறந்து விடுகின்றனர்...பாதாளச் சாக்கடை கழிவுநீரால் விளைநிலங்கள் பாதிப்பு: பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் மீது விவசாயிகள் புகார்

பெரியகுளம்: பெரியகுளத்தில் நகராட்சி நிர்வாகம் திறந்துவிடும் பாதாளச் சாக்கடை கழிவுநீரால், விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். பெரியகுளம் நகராட்சியில் சேகரமாகும் பாதாள சாக்கடை கழிவுநீரை எ.புதுப்பட்டி பகுதியில் நகராட்சிக்குச் சொந்தமான பாதாளச் சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்கின்றனர். இங்கு சுத்திகரிப்பு செய்யப்படும் கழிவுநீரை, நகராட்சிக்கு சொந்தமான 100 ஏக்கர் புல் பண்ணைக்கு பாய்ச்சப்பட்டு புல் வளர்க்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக 100 ஏக்கர் புல் பண்ணையில் 24 ஏக்கரில் மட்டுமே புல் வளர்க்கப்படுவதால், சுத்திகரிக்கப்படும் பாதாளச் சாக்கடை நீரை முழுமையாக பாய்ச்ச முடியவில்லை. இதனால், எஞ்சும் பாதாளச் சாக்கடை கழிவுநீரை, சுத்திகரிப்பு நிலையம் அருகில் உள்ள விளைநிலங்களில் திறந்து விடுகின்றனர். இதனால், விளைநிலங்களில் உள்ள தென்னை, மா, கரும்பு சாகுபடிகள் பாதிக்கப்படுகின்றன.

தென்னந்தோப்புகளில் கழிவுநீர் தேங்குகிறது. இதில் கொசுக்கள் உருவாகி விவசாய தொழிலாளர் பணி செய்ய இடையூறு செய்கின்றன. மேலும், கிணற்று நீரும் மாசடைவதாக தெரிவித்துள்ளனர். பாதாள சாக்கடை நீரை விளை நிலங்களில் செல்வதை தடுத்து நிறுத்த பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், ஜேசிபி மூலம் வாய்க்கால் அமைத்து, விளை நிலங்களில் சாக்கடை நீரை திறந்து விடுவதால் விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.


Tags : canal ,administration ,Periyakulam , Drainage, sewerage, sewage, Periyakulam, farmers complain
× RELATED கீழ்பவானியில் தண்ணீர் எடுத்த லாரி பறிமுதல்