×

கடைகள் ஏலம் 3வது முறை ஒத்திவைப்பு பேரூராட்சி அலுவலகம் முன்பு வாலிபர் தீக்குளிக்க முயற்சி: திருப்புத்தூரில் பரபரப்பு

திருப்புத்தூர்: திருப்புத்தூர் பஸ் ஸ்டாண்ட் கடை ஏலம் நேற்று மூன்றாவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் வாலிபர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையம் புதிதாக கட்டப்பட்டு கடந்த டிச.4ம் தேதி திறக்கப்பட்டது. பேருந்து நிலையத்திற்குள் உள்ள கடைகள், ஓட்டல் மற்றும் டூவீலர் ஸ்டாண்ட் ஆகியவற்றுக்கான ஏலம் கடந்த ஜன.7ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜன.21ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் அந்த தேதியும் திடீரென ரத்து செய்யப்பட்டு, பிப்.5ம் தேதி(நேற்று) ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து பேரூராட்சி அலுவலகம் முன்பு நேற்று காலை ஏலம் எடுப்பதற்காக ஏராளமான வர்த்தகர்கள் கூடினர். அப்போது, பழைய கடை வியாபாரிகள், தங்களுக்குதான் கடைகளை ஒதுக்க வேண்டும், பழைக கடைகளுக்கு கட்டிய தொகையை மீண்டும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அலுவலகத்தை முற்றுகையினர். மேலும், புதிதாக ஏல தொகை டிடி எடுத்தவர்களை உள்ளே அனுமதிக்காமல் தடுத்தனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

எனவே பேரூராட்சி நிர்வாகம் தேதி குறிப்பிடாமல் மீண்டும் ஏலத்தை ஒத்தி வைப்பதாக நோட்டீசை ஒட்டியது. இதனால் வர்த்தகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது திருப்புத்தூர் பூக்கடையில் வேலை பார்க்கும் இடையமேலூரை சேர்ந்த தினேஷ்(30) என்பவர், பஸ் ஸ்டாண்டு கடையை பழைய வியாபாரிகளுக்கே வழங்க வேண்டும் என கோஷமிட்டார். திடீரென தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்து காவல்நிலையம் கொண்டு சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : Shops auction , Shops Auction, Postponement, Office, Youth Fire, Tiruputhur
× RELATED பஸ் ஸ்டாண்ட் கடைகள் ஏலம் பிப்.5க்கு தள்ளிவைப்பு