×

வாங்கிய கடனை அடைப்பதற்காக அறுவடை செய்த நெல்மணிகளை வயலிலேயே விற்கும் விவசாயிகள்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கனமழையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய நெல்லை விவசாயிகள் அறுவடை செய்து நிலங்களிலேயே வைத்து விற்பனை செய்யும் நிலைக்கு விவசாயிகள் ஆளாகியுள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் தொடர் மழையால் நெல் கதிர்கள் சேதமடைந்துள்ளன. எஞ்சிய நெல் கதிர்களை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்த அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகளை வயல்களிலே எடை போட்டு விற்பனை செய்யும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்

விவசாயிகள் கூறுகையில், ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் தொடர் மழையால் ஏக்கர் ஒன்றிற்கு சுமார் 35 முதல் 45 மூட்டைகள் வரை மகசூல் கிடைக்க வேண்டிய நிலங்களில், சுமார் 5 முதல் 20  மூட்டைகளுக்கும் குறைவாகவே கிடைத்து வருகின்றன. விவசாயிகள் கடன் வாங்கி விதைப்பு, களை எடுத்தல், உரமிடுதல், களைக்கொல்லி, பூச்சி மருந்து தெளிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு செலவழித்துள்ளனர்.

தற்பொழுது மழையால் சேதமடைந்தது போக எஞ்சியுள்ள நெல்லையாவது அறுவடை செய்து வீடு கொண்டு செல்லலாம் என்றால், கதிர் அறுவடை இயந்திர கூலி கூட கொடுக்க முடியாத நிலை உள்ளது. விளைச்சலுக்கு வந்துள்ள நெல் மணிகளை அறுவடை செய்து வீடுகளுக்கு கொண்டு செல்லாமல், அறுவடை செய்த நிலங்களிலேயே எடை போட்டு விற்பனை செய்து கடன்களை அடைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தனர்.

Tags : field , Purchased credit, harvest, paddy, farmers
× RELATED சரக்கு ரயில் தடம் புரண்டது