×

தொடர் விபத்துகளை குறைக்க தொப்பூர் கணவாயில் 100 இடத்தில் மின்விளக்கு

தர்மபுரி : தொப்பூர் கணவாயில் சாலை விபத்துக்களை குறைக்க, 100 இடத்தில் சோலார் மின்விளக்கு அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் அதிக விபத்து நடந்த 2 இடத்தில், உயர்மின்விளக்கு அமைக்கப்பட உள்ளது.  தர்மபுரி- சேலம் மாவட்டத்தின் எல்லையான தொப்பூர் கணவாயின் வழியாக கன்னியாகுமரி- காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் தினசரி ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன. டோல்கேட்டில் இருந்து தொப்பூர் இரட்டை பாலம் வரை, 8 கிலோ மீட்டர் தூரம் சாலை இறக்கமும், வளைந்தபடியும் செல்கிறது.

தொப்பூர் கணவாயில் 4 கிலோ மீட்டர் தூரம் மிகவும் அபாயகரமான வளைவுகள் கொண்ட சாலையாக உள்ளது. கடந்த டிசம்பர் 12ம் தேதி, ஆந்திராவில் இருந்து சிமெண்ட் பாரம் ஏற்றி வந்த லாரி 12 கார், ஒரு மினி சரக்கு வேன், டூவிலர் என மொத்தம் 15 வாகனங்கள் மீது மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். 27பேர் காயம் அடைந்தனர். அதேபோல், கடந்த டிசம்பர் 9ம் தேதி, தொப்பூர் கணவாயில் 4 லாரி, 9 கார்கள் விபத்தில் சிக்கின. இதில் 20பேர் காயம் அடைந்தனர். தொப்பூர் கணவாயில் கடந்த ஆண்டு மட்டும் 15பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

எனவே, தொப்பூர் கணவாயில் சாலை விபத்துக்களை தடுக்க, தேசிய நெடுஞ்சாலைத்துறை, எல்.அன்ட்.டி நிர்வாகம் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளன. தொப்பூர் கணவாய் கட்டமேட்டிலிருந்து-  மேட்டூர் பிரிவு சாலை வரை சாலை பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கணவாயில் பகுதியில், 100 இடங்களில் சோலார் மின்விளக்கு அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. ஆஞ்சநேயர் கோயில் இறக்கம் மற்றும் போலீஸ் குவாட்டர்ஸ் அருகே, உயர் மின்கோபுர விளக்கு அமைக்கும் பணியும் நடக்கிறது. தற்போது 70 சதவீத பணி முடிந்துள்ளது.

இதுகுறித்து தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் கூறியதாவது: தொப்பூர் கணவாயில் சாலை விபத்துக்களை தடுக்க, தேசியநெடுஞ்சாலையுடன் இணைந்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். தொப்பூர் கணவாயில் இரவு நேரத்தில், பகல்போன்று தெரியவதற்கு 100 இடங்களில் சோலார் மின்விளக்குள் அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. அதிகமாக விபத்து நடந்த 2இடத்தில் உயர்மின்கோபுர விளக்கும், அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இரவு நேரத்தில் சாலையில் பிரதிபலிப்பான் தெரிய சிவப்பு, வெள்ளைநிற வண்ணத்தில் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடக்கிறது. மேலும் தேசிய நெடுஞ்சாலைத்துறை கட்டமேட்டில் இருந்து மேட்டூர் பிரிவு சாலை வரை, சர்வே செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : places ,accidents , Dharmapuri,Road accident,Street lights
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்