×

சாலை வசதி இல்லாததால் இறந்தவர் உடலை மலைப்பாதையில் சுமந்து அடக்கம் செய்யும் அவலம்

*‘இளவரசி’ மண்ணில்தான் இந்த கொடுமை

கொடைக்கானல் :கொடைக்கானல் அருகே சாலை வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடல்களை மலைப்பாதையில் 2 கிமீ தூரம் ஆபத்தான முறையில் தோளில் சுமந்து சென்று அடக்கம் செய்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே வில்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்டது பரப்பன் ஓடை. இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு சாலை வசதியே கிடையாது.

மண் சாலை மட்டும்தான். இந்த மண் சாலையும் தனியார் ேதாட்ட கிணற்று நீரை திறந்து விடுவதால் நடப்பதற்கே லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை வாகனங்களில் அழைத்து வர முடியாமல் கொடைக்கானல் அரசு மருத்துவமனை வரை டோலி கட்டியே தூக்கியே வருகின்றனர்.மேலும் இறந்தவர்களையும் 2 கிமீ தூரத்தில் உள்ள மயானம் வரை தோளில் சுமந்தபடியே செல்லும் அவலம் உள்ளது. நேற்று இப்பகுதியை சேர்ந்த டெல்சி என்ற பெண் உடல் நலமின்றி இறந்து விட்டார். இவரது உடலை கிராம மக்கள் 2 கிமீ தூரம் தோளில் சுமந்தபடி லூர்துபுரம் மயானத்திற்கு கொண்டு வந்து அடக்கம் செய்தனர்.

இப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘வில்பட்டி பரப்பன் ஓடைக்கு சாலை வசதி கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அவசர காலங்களில் கடும் அவதிக்குள்ளாகி வருகிறோம். எனவே இப்பகுதிக்கு உடனே சிமெண்ட் சாலை அமைப்பதுடன், தனியார் தோட்டத்தில் இருந்து வெளியேறும் நீரை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : deceased ,hill ,road facilities , Kodaikanal,
× RELATED வனப்பகுதியில் காட்டுத் தீ: இருவர் மீது வழக்குபதிவு