×

ஜோலார்பேட்டையில் ரயில்வே மேம்பால பணிகளால் 100 மீட்டர் தூரம் கடக்க 5 கி.மீ சுற்றிச்செல்லும் அவலம்

*மூடிய சிறிய நடைமேம்பாலத்தை திறக்க கோரிக்கை

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டையில் நடைபெற்றுவரும் ரயில்வே மேம்பால பணிகளால் 100மீட்டர் தொலைவை கடக்க 5 கிலோமீட்டர் சுற்றி செல்லும் அவல நிலையால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். ஜோலார்பேட்டையில் உள்ள பழைய பிரிட்ஜ் எனப்படும் நடைமேடை சாலை உள்ளது. இந்த நடைமேடை வழியாக சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு கிழக்கு மேற்காக உள்ள பழைய ஜோலார்பேட்டை மற்றும் நாட்றம்பள்ளி சாலையை இணைக்கும் முக்கிய பாலமாக இந்த ரயில்வே நடை மேடை உள்ளது.  

எனவே இப்பகுதி மக்கள் நடைமேடை பைக் மற்றும் நடந்து செல்ல பயன்படுத்திவந்தனர். இந்த நடைமேடை வழியாக செல்லும்போது வாகன ஓட்டிகள் தங்களின் இருசக்கர வாகனத்தை இயக்கி செல்லாமல் தள்ளிச் செல்ல வேண்டும். மீறினால் ரயில்வே நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதையடுத்து இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து கடந்த 2017ம் ஆண்டு ரயில்வே துறை சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு மேம்பால பணிகள் தொடங்கி ஆமை வேகத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் கொரோனா காரணமாக மேம்பால பணிகள் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் சார்பில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு மேம்பால பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த மாத இறுதிக்குள் மேம்பால பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில் ரயில்வே மேம்பால பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதால் ஜோலார்பேட்டை கிழக்குப் பகுதியிலிருந்து மேற்கு பகுதிக்கு செல்ல பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சிறிய ரயில்வே நடை மேம்பாலத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  இதனால் 100 மீட்டர் தூரத்தை கடந்து செல்ல சுமார் ஐந்து கிலோமீட்டர் சுற்றிச்செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இதனால் பழைய ஜோலார்பேட்டை, இடையம்பட்டி, குடியானகுப்பம் உள்ளிட்ட நாட்றம்பள்ளி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தற்போது தடை செய்யப்பட்டுள்ள சிறிய ரயில்வே நடைமேடையை விரைவில் சீரமைத்து பொதுமக்கள் செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Jolarpettai , Jollarpettai,Railway Bridge,
× RELATED பெங்களூரு ரயில் போக்குவரத்தில் மாற்றம்