நெமிலி அடுத்த கீழ்வெண்பாக்கம் கிராமத்தில் இடியும் அபாயத்தில் நியாய விலைக்கடை

* சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

நெமிலி : நெமிலி அடுத்த கீழ்வெண்பாக்கம்  கிராமத்தில் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள நியாய விலைக்கடையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெமிலி அடுத்த கீழ்வெண்பாக்கம்  கிராமத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அப்பகுதியில் உள்ள நியாய விலைக்கடையில் தங்களுக்கு தேவையான ரேஷன் பொருட்களை வாங்கி உபயோகிக்கின்றனர்.

அவ்வாறு அங்குள்ள நியாய விலைக்கடையின் கட்டிடம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது இந்த கட்டிடம் பாழடைந்து சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்தும், மழை காலங்களில் கட்டிடம் முழுவதும் மழைநீர் ஒழுகுவதால் அங்கு வைக்கப்பட்டுள்ள அரிசி, பருப்பு மற்றும் சர்க்கரை ஆகிய பொருட்கள் மழைநீரில் நனைந்து வீணாகிறது.

இதனால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும், கட்டிடத்தின் மேல் பகுதி முழுவதும் தார்பாயால் மூடி வைத்துள்ளனர். மேலும், அப்பகுதியினர் ரேஷன் பொருட்களை வாங்க நியாயவிலை கடைக்கு செல்லும்போது எங்கே கட்டிடம் இடிந்து விழுந்துவிடுமோ என்று அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாக அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை மேற்கொண்டு, பாழடைந்த நிலையில் உள்ள நியாய விலை கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்டித்தர அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>