×

செய்யாறு அருகே மணல் கடத்த வசதியாக கால்வாயை ஆக்கிரமித்து பாதை அமைத்த மணல் கொள்ளையர்கள்

*கண்டுகொள்ளாத அதிகாரிகள்

செய்யாறு : செய்யாறு அருகே தண்டரையில் மணல் கடத்த ஏதுவாக கால்வாயை ஆக்கிரமித்து பாதை அமைத்துள்ளதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. செய்யாறு ஜெயினர் கோயில் அருகே தண்டரை கிராமம் ஆற்றுப் படுகையில் அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டில் இருந்து மழைநீர் பிரிந்து ஏரிகளுக்கு செல்வதற்காக 14 கி.மீ. தூரம் அமைந்துள்ள கால்வாயை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுப்பணித்துறையினர் தூர்வாரினர். கடந்த சில ஆண்டுகளாக முறையான பராமரிப்பு பணி செய்யாததால் கால்வாயில் மீண்டும் முட்புதர்கள், ஆகாயத்தாமரை, கோரை புற்கள் முளைத்தது. இதனால், மழைநீர் முறையாக கால்வாயில் செல்லாமல் வீணாகி வருகிறது.

இந்நிலையில், மணல் கொள்ளையர்கள் ஆற்றில் திருடப்படும் மணலை எளிதில் கொண்டு செல்ல வசதியாக கால்வாயில் முரம்பு மண் கொட்டி பாதையாக மாற்றியுள்ளனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லையாம். தண்ணீர் செல்லும் பாதையை மண் கொட்டி மறித்து மணல் கடத்தல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களுக்கு ஏதுவாக பயன்படுத்தி வருகின்றனர்.

எனவே, விவசாயத்திற்கு முக்கியமாக உள்ள தண்டரை கால்வாயை மணல் கொள்ளையர்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டும், தூர்வாரியும் விரைவாக மாமண்டூர் ஏரி வரை பாசனநீர் செல்லவும் ஏதுவாக செப்பனிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : pirates ,Sand ,Seiyaru , Seiyaru,Sand Robbery,Making way
× RELATED இலுப்பூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்