×

டாஸ்மாக் பார்களில் விடிய விடிய மதுபாட்டில் விற்பனை

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டத்தில் டாஸ்மாக் பார்களில் விடிய விடிய மதுபாட்டில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை, அதிகாரிகள் யாரும் கண்டுகொள்வதில்லை. டாஸ்மாக் கடைகளில் பீர், பிராந்தி, ரம், விஸ்கி ஆகிய மதுபாட்டிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதையொட்டி, ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள ஒரு சில டாஸ்மாக் கடைகளில் மட்டும் பார்கள் இயங்குகிறது. டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்க வேண்டும் என்பது விதி.ஆனால் பெரும்புதூர் உட்கோட்டத்தில் உள்ள பெரும்பாலான கடைகள் இரவு 9.30 மணியுடன்  மூடப்படுகிறது. இதனை பயன்படுத்தி கொண்டு பார் உரிமையாளர்கள், மதுபாட்டில்களை வைத்து வைத்து விடிய விடிய அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்வதைவிட குவாட்டரூக்கு 40 கூடுதலாக வாங்குகின்றனர். இதில் வரும் தொகையை, டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கும் ஒரு பங்கு தருவதாக குடிமகன்கள் புகார் கூறுகின்றனர். இரவு 9.30 மணியோடு கடையை மூடுவதால்,  அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

இதுகுறித்து குடிமகன்கள் கூறுகையில், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் தாலுகாவில் டாஸ்மாக்கள் கடை இயங்குகின்றன. இங்கு, விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களுக்கு 10  முதல் 20 வரை கூடுதலாக விற்கின்றனர். இரவு 9.30 மணிவரை கடை திறந்து இருக்கும். பின்னர், அருகில் உள்ள பார்களிலும், பெட்டிக்கடைகளிலும் விடிய, விடிய மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பார் உரிமையாளர்களும், டாஸ்மாக் ஊழியர்களும் இணைந்து, கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்து, இதில் வரும் லாபத்தில், சமமாக பங்கு பிரித்து கொள்கின்றனர். இதுபற்றி மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம், கலால் பிரிவு போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கும் பலமுறை தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. மாறாக, கடைகளில் சோதனை நடத்துவதுபோல் வந்து, அவர்களுக்கு தேவையான பாட்டில்களை அள்ளி செல்கின்றனர் என்றனர்.

போலி மது விற்பனை அமோகம்
மணிமங்கலம் டாஸ்மாக் கடையில் கலப்பட மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக குடிமகன்கள் புலம்புகின்றனர். டாஸ்மாக் கடையில் விற்பனை செய்யப்படும் விலை குறைவான மதுபாட்டில்களில் மூடியை திறந்து, அதில் உள்ள சரக்கை பாதியாக எடுத்துவிட்டு, ரசாயனம் கலந்து விற்பனை செய்யப்படுகிறது. இதுபற்றி குடிமகன்கள் கேட்டால், பார்களில் உள்ள ரவுடிகளை கொண்டு மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.

Tags : bars ,Vidya Vidya ,Tasmac , Sale of Vidya Vidya liquor at Tasmac bars
× RELATED 3 நாட்களுக்கு பிறகு திறப்பு டாஸ்மாக் மதுக்கடைகளில் குவிந்த மதுபிரியர்கள்