சாலையோரம் பழச்சாறு கடை நடத்த மாதம்தோறும் மாமூல் வசூலித்த எஸ்ஐ, தலைமை காவலர் கைது

சென்னை: சென்னை லஞ்ச ஒழிப்புத் துறையில் ராமு (43), (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் புகார் ஒன்றை அளித்தார். அதில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நான் பூக்கடை மற்றும் யானைக்கவுனி பகுதியில் சாலையோர பழச்சாறு கடை நடத்தி வருகிறேன்.  பூக்கடை காவல் நிலையத்தில் தலைமை காவலராக வேலை செய்யும் நாகராஜ், சாலையோரம் பழச்சாறு கடை தடையின்றி நடத்த ஒவ்வொரு மாதமும் எனக்கு ரூ.300 மாமூல் தர வேண்டும் என்று கட்டாப்படுத்தி வாங்கி வருகிறார். அதேபோல், யானைகவுனி போக்குவரத்து காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஜெயவேலு என்பவரும் ஒவ்வொரு மாதமும் ரூ.500 மாமூல் தர வேண்டும். இல்லை என்றால் போக்குவரத்துக்கு இடையூறாக கடை இருப்பதாக கூறி கடையை காலி செய்து விடுவேன் என மிரட்டி வருகிறார். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார்.

புகாரின்படி, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பழச்சாறு கடை நடத்தும் ராமுவிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர். அதன்படி நேற்று பூக்கடை காவல் நிலைய தலைமை காவலர் நாகராஜ் ரூ.300 லஞ்சமாக ராமுவிடம் பெற்றபோது அங்கு சாதாரண உடையில் மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக தலைமை காவலர் நாகராஜை கைது செய்தனர். அவரிடம் இருந்து லஞ்சம் பணம் ரூ.300 பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், யானைக்கவுனி போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஜெயவேலு நேற்று மதியம் ராமுவிடம் இருந்து ரூ.500 மாமூல் வாங்கும் போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து லஞ்சம் பணம் ரூ.500 பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories:

>