பாதாள சாக்கடை பள்ளத்தில் மண் சரிந்து தொழிலாளி பலி: மற்றொருவர் கவலைக்கிடம்

தாம்பரம்: தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட மேற்கு தாம்பரம் பர்மா காலனி திருநீர்மலை சாலையில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக 15 அடி ஆழம்வரை தோண்டப்பட்ட பள்ளத்தில் 8 தொழிலாளர்கள் நேற்று வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, ராட்சத இரும்பு குழாயை பொக்லைன் இயந்திரம் மூலம் நகர்த்த முயன்றபோது, திடீரென மண் சரிந்ததால், பள்ளத்தில் வேலை செய்துகொண்டிருந்த திருவொற்றியூரை சேர்ந்த சேகர் (28), மரக்காணத்தை சேர்ந்த பாரதி (21) ஆகிய இருவர் மண்ணுக்கு அடியில் சிக்கினர். அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள், உடனடியாக தாம்பரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், விரைந்த தீயணைப்பு படை வீரர்கள் அரை மணி நேரம் போராடி,  இருவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், சேகர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து, பிரேத பரிசோதனைக்காக உடல் அனுப்பி வைக்கப்பட்டது.  படுகாயமடைந்த பாரதி உயிருக்கு ஆபத்தான நிலையில்,  சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற 6 தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.  போலீசார் விசாரணையில், பணியின்போது தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்  வழங்கப்படாததும், இதை குடிநீர் வாரிய உதவி பொறியாளர் வெங்கடேசன் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, பணிகளை மேற்கொள்ளும் தனியார் ஒப்பந்த நிறுவனம் மீது 304 (ஏ) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், ஒப்பந்ததாரர் வாசுதேவ ரெட்டி, துணை ஒப்பந்ததாரர் டில்லி ராஜா, மேலாளர் சுனந்தகுமார், பொக்லைன் ஓட்டுனர் வினோத் ஆகியோரை கைது செய்து, ஜாமீனில் விடுவித்தனர்.  

Related Stories:

>