மது போதை தகராறில் வாலிபரை கொன்று தீவைத்து எரிப்பு: நண்பர்கள் 2 பேர் கைது

அண்ணாநகர்: நொளம்பூர் வாவின் ரோடு மங்கள் ஏரி பார்க் அருகே நேற்று அதிகாலை 3 மணியளவில், 2 பேர் மது போதையில் சாலையோரம் ஒரு சடலத்தை தீயிட்டு எரித்துக்கொண்டு இருந்தனர். தகவலறிந்து நொளம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, அந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.  அவர்கள் அளித்த வாக்குமூலமாக போலீசார் கூறியதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த எலி (எ) சிவக்குமார் (27), அம்பத்தூரை சேர்ந்த விஷ்ணு (33), பாஸ்கர் (44) ஆகிய மூவரும் நொளம்பூர் பகுதியில் குப்பை பொறுக்கும் தொழில் செய்து வந்தனர். நண்பர்களான இவர்கள், தினசரி இரவில் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவதும் வழக்கம்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கேறியதும் விஷ்ணு, பாஸ்கர் ஆகியோருக்கும் சிவக்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த இருவரும் அங்கு கிடந்த கற்களை எடுத்து, சிவக்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து, போலீசில் சிக்காமல் இருக்க, சடலத்தை தீ வைத்து எரித்துவிட்டு தப்பியுள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து விஷ்ணு, பாஸ்கர் ஆகிய 2 பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>