×

தமிழர்களின் வேலைவாய்ப்பு திட்டமிட்டு பறிப்பு: என்.எல்.சி. நிறுவன பணியிட தேர்வை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டை சேர்ந்தவர்களின் வேலைவாய்ப்பை திட்டமிட்டுப் பறித்திடும் வகையில் பாரபட்சமான முறையில் நடத்தப்பட்டுள்ள என்.எல்.சி நிறுவனப் பணியிடங்களுக்கான தேர்வை மத்திய  அரசு ரத்து செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி) 259 GET பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில், வெளிமாநில தேர்வு மையங்களில் எழுதியவர்களில் 99 சதவீதம் பேர் தேர்வு பெற்றுள்ள நிலையில், தமிழகத் தேர்வு மையங்களில் எழுதியவர்களில் ஒரு சதவீதம் பேர் மட்டுமே தேர்வு பெற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த பாரபட்சமான தேர்வு முறைக்கு  திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்வு பெற்றுள்ள 1582 பேரில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் வெறும் 8 பேர் மட்டுமே. என்.எல்.சி.யில் அப்ரென்டீஸ் பயிற்சி முடித்தவர்கள், இறந்தோர் வாரிசுகள், என்.எல்.சி. நிறுவனத்திற்கு வீடு நிலம் கொடுத்தவர்கள் என ஆயிரக்கணக்கான பேருக்கு இன்னும் வேலை வாய்ப்புகள் வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில் - தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்புகளையும் வெளிமாநிலத்தில் உள்ளவர்களுக்குத் தாரைவார்க்கும் மத்திய பாஜக அரசின் போக்கு மிகுந்த வருத்தத்திற்குரியது.

எனவே, என்.எல்.சி.யில் நடைபெற்றுள்ள இந்த GET தேர்வை உடனடியாக ரத்து செய்து - வெளிமாநிலத் தேர்வு மையங்களில் நடைபெற்றுள்ள தேர்வில் 99 சதவீதம் வெளிமாநிலத்தவரே தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள என்.எல்.சி உள்ளிட்ட மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழக இளைஞர்களுக்கே வேலைவாய்ப்புக் கிடைத்திடுவதை மத்திய பா.ஜ. அரசு உறுதி செய்திட வேண்டும். முதல்வர் பழனிசாமி இது தொடர்பாக உடனடியாக மத்திய அரசுடன் பேசி - மேற்கண்ட தேர்வை ரத்து செய்து - தமிழகத்திலேயே தேர்வு மையங்களை அமைத்து அந்தப் பணியிடங்களுக்குத் தேர்வு செய்திட வலியுறுத்த வேண்டும்.  தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பைத் திட்டமிட்டுப் பறித்துள்ள இந்தத் தேர்வு ரத்து செய்யப்படவில்லையென்றால் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட திமுக சார்பில் மாபெரும் போராட்டம் விரைவில் நடத்தப்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamils ,NLC Institutional ,government ,MK Stalin , Employment of Tamils Institutional workplace selection should be abolished: MK Stalin's insistence on the central government
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு