விதியே விதியே என்செய நினைத்தாய் வன்னிய சாதியை எனக்குரையாயோ? 20% இடஒதுக்கீட்டை அமல்படுத்த அதிமுக தயக்கம்: ராமதாஸ் டிவிட்டரில் விரக்தி பதிவு

சென்னை: ‘‘விதியே விதியே என் செய நினைத்தாய் வன்னிய சாதியை எனக்குரையாயோ?’’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் டிவிட்டரில் விரக்தியாக கருத்து தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் இடம்பெறும் என்று கூறப்பட்ட பாமக நிறுவனர் ராமதாஸ் திடீரென ஒரு கோரிக்கையை முன் வைத்துள்ளார். அதாவது, கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அப்படி வழங்கினால் மட்டுமே அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெறும் என்று அதிரடியாக அறிவித்தார்.  இது சம்பந்தமாக பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி கடந்த டிசம்பர் 1ம் தேதி தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மனு அளித்தார். அதை தொடர்ந்து, தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைத்து முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வருவதால் தான், வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீட்டை ராமதாஸ் முன்வைக்கிறார் என்று பேச்சு எழுந்தது. இதனால் ராமதாசை சமாதானப்படுத்த கடந்த டிசம்பர் மாதம் தமிழக அமைச்சர்கள் அன்புமணி, வேலுமணி, கே.பி.அன்பழகன் ஆகியோர் தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் வீட்டுக்கு நேரடியாக சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு, தேர்தலில் பாமகவுக்கு 41 தொகுதி வேண்டும் என்றும், கூடுதலாக சில கோரிக்கைகளையும் ராமதாஸ் முன் வைத்ததாக கூறப்பட்டது. ஆனால், அதிமுக தரப்பில் இதற்கு சரியான பதில் தெரிவிக்கவில்லை. பாமக கேட்பதை போல வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கினால் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் தங்கள் சமூகத்தினருக்கும் இடஒதுக்கீடு கேட்டு போர்க்கொடி தூக்கும். அப்படி அவர்கள் எல்லாரும் போர்க்கொடி தூக்கினால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை தான் ஏற்படும் என கருதி பாமகவுடனான பேச்சுவார்த்தையை தொடங்குவதில் அதிமுக காலம் தாழ்த்தி வந்தது.

இந்நிலையில், அதிமுகவை மிரட்டும் வகையில் பாமக நிர்வாக குழு கூட்டம் ஜனவரி 31ம் தேதி இணையவழி மூலமாக நடைபெறும் என்றும், இதில் கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாக கடந்த வாரம் பகிரங்கமாக ராமதாஸ் அறிவித்தார். தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அமைச்சர் தங்கமணி வீட்டில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் பேச்சுவார்த்தையில் எந்த முடிவுகளும் எட்டப்படாத நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேரடியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் 20 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக உறுதி கொடுக்காததால், ராமதாஸ் கடும் அதிருப்தி அடைந்தார். இதனால்தான், முதல்வருடனான சந்திப்பு தள்ளிப்போனதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று தனது டிவிட்டரில் பக்கத்தில் ‘‘விதியே விதியே என் செய நினைத்தாய் வன்னிய சாதியை எனக்குரையாயோ?’’ என்று விரக்தியுடன் பதிவிட்டுள்ளார். அதிமுக தயக்கம் காட்டி வரும் நிலையில் பாமக நிறுவனரும் முடிவு எடுக்க முடியாமல் திணறி வருகிறார்.

* அதிமுகவை மிரட்டும் வகையில், பாமக நிர்வாக குழு கூட்டம் ஜனவரி 31ம் தேதி இணைய வழியில் நடைபெறும் என்றும், கூட்டணி குறித்து முக்கிய முடிவு அறிவிக்கப்படும் என்றும் ராமதாஸ் பகிரங்கமாக அறிவித்தார்.

* வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக உறுதி கொடுக்காததால் ராமதாஸ் கடும் அதிருப்தி அடைந்தார். இதனால், முதல்வருடனான சந்திப்பும் தள்ளிப்போனது.

Related Stories:

>