×

அமைச்சரை எதிர்த்தே தொகுதியை அம்போவென விட்ட எம்எல்ஏ: சாத்தூர் தொகுதி எம்எல்ஏ ராஜவர்மன்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தொகுதியில் 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வென்ற எதிர்கோட்டை சுப்பிரமணியன், டிடிவி தினகரன் கட்சிக்கு தாவியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து நடந்த இடைத்தேர்தலில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நிழலாக இருந்த அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் வெற்றி பெற்றார். தேர்தல் முடிந்து ஓராண்டு முடிவதற்குள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும், ராஜவர்மனுக்கும் அரசியல் போர் தொடங்கியது. மாவட்டத்தில் 15 நகர, ஒன்றிய செயலாளர்களை தன் பக்கம் இழுத்து அமைச்சருக்கு எதிராக அரசியல் போரை தொடங்கினார். அதிமுகவின் உட்கட்சி மோதலால் சாத்தூர் தொகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகள், கடந்த 5 ஆண்டுகளில் கேள்விக்குறியாகி விட்டது.  தீப்பெட்டி, நிப்பு தயாரிப்பு, பட்டாசு தொழில்கள் நலிவடைந்து வருகிறது. ஆலங்குளம் சிமென்ட் ஆலையை நவீனமயமாக்க அப்போதைய முதல்வர் கருணாநிதி ரூ.95 கோடி நிதி ஒதுக்கினார்.  ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக இந்த தொழிற்சாலை நவீனப்படுத்தப்படவே இல்லை.  இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.

சாத்தூர் அருகே சிறப்பு பொருளாதார மண்டலம் திமுக ஆட்சியில் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆட்சி மாற்றம் காரணமாக அந்த திட்டமும் கிடப்பில் போட்டு வைத்துள்ளனர். தொகுதி மக்களின் வளர்ச்சிக்காக எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. புதிய பஸ் ஸ்டாண்ட், படந்தால் சந்திப்பில் மேம்பாலம், தொழிற்பேட்டை போன்ற பல்வேறு வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. தொழில் வளர்ச்சி உள்ள தொகுதியை மேம்படுத்துவதை விட தன்னை மேம்படுத்துவதிலேயே எம்எல்ஏ குறியாக இருந்ததால், சாத்தூர் தொகுதி வளர்ச்சிப்பாதையில் பின்தங்கி உள்ளதாக மக்கள் புலம்புகின்றனர். இடைத்தேர்தலில் ஜெயித்தும் தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லையே என மக்கள் புலம்புகின்றனர்.

‘எதையும் நிறைவேத்தல எங்க தொகுதி எம்எல்ஏ’
சாத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சீனிவாசன் கூறுகையில், ‘‘அதிமுக எம்எல்ஏ சாத்தூர் பஸ் ஸ்டாண்டை விரிவுபடுத்துவதாக கூறினார். பாதாள சாக்கடை திட்டம் அரைகுறையாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.  வைப்பாறு சீரமைப்பின்றி கழிவுநீர் ஓடி சுகாதாரக்கேடாக உள்ளது. தொகுதியில் 20 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் வழங்கப்படுவதால் மக்கள் எம்எல்ஏ மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். வெம்பக்கோட்டை அரசு மருத்துவமனையில் தீக்காயப்பிரிவு, ஆலங்குளம் சிமென்ட் ஆலையை நவீனப்படுத்துதல், இஎஸ்ஐ மருத்துவமனை அமைப்பதாக கூறி எதையும் நிறைவேற்றவில்லை. என்னை தேர்ந்தெடுத்திருந்தால் இதையெல்லாம் நிறைவேற்றி இருப்பேன். சாத்தூரில் சிப்காட் அமைக்க திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு இடம் தேர்வானது. அதன்பின் வந்த அதிமுக ஆட்சியில் கிடப்பில் போட்டுவிட்டனர். இதனால் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காமல் போய் விட்டது’’ என்கிறார்.

‘அரசு விழாவுக்கு அழைப்பதில்லை’
சாத்தூர் அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன் கூறுகையில், ‘‘சாத்தூர் தொகுதியில் சாலை, குடிநீர், மேம்பாலம் மற்றும் குளியல் தொட்டி அமைத்து கொடுத்துள்ளேன். புதிய நகராட்சி கட்டிடம், சிவன் கோயில் தெப்பத்திற்கு மழைநீர் செல்வதற்கு வாறுகால், மக்களுக்கு நடைபாதை, பூங்கா மற்றும் சாத்தூரில் சார்பு நீதிமன்றம் போன்றவற்றை அமைத்து கொடுத்துள்ளேன். கொரோனா காலத்தில் தொகுதி முழுவதும் எனது சொந்த செலவில் கிருமிநாசினி மருந்து தெளிக்க செய்தேன். சாத்தூர் தொகுதிக்கு முதல்வரிடம் கேட்டு 9 மினி கிளினிக் வாங்கினேன். அதில் நான்கை மாவட்டத்தின் ‘முக்கிய புள்ளி’ அவரது தொகுதிக்கு கொண்டு சென்று விட்டார். சாத்தூர் தொகுதியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் எனது பெயர் வந்து விடக்கூடாது என திட்டமிட்டே அழைப்பிதழ்கள் அச்சடிப்பதில்லை. தொகுதி எம்எல்ஏ என்ற முறையில் என்னை அழைப்பதே இல்லை’’ என்கிறார்.

Tags : MLA ,Minister ,constituency ,Sattur MLA Rajavarman , MLA who left the constituency against the Minister: Sattur MLA Rajavarman
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...