எதிர்க்கட்சி எம்பி.க்கள் அமளி: திங்கள் வரை மக்களவை ஒத்திவைப்பு

புதுடெல்லி: வேளாண் சட்டங்களை எதிர்த்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை வரும் திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்து வருகிறது. ஆனால், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. மக்களவை ஏற்கனவே 3 நாட்கள் தொடர்ந்து முடக்கப்பட்ட நிலையில், நேற்றும் மாலை 4 மணிக்கு அவை தொடங்கியது. அப்போது வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக, காங்கிரஸ், இடதுசாரி எம்பி.க்கள் பதாகைகளை ஏந்தியபடி சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட முயன்றனர். இதனால் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. அவர்களை இருக்கைக்கு செல்லும்படி வேண்டுகோள் விடுத்த சபாநாயகர் ஓம் பிர்லா, அவையை மாலை 6 மணி வரை ஒத்திவைத்தார். மாலை 6 மணிக்கு அவை கூடியபோதும் எதிர்க்கட்சியினர் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவையை திங்கட்கிழமை வரை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

திருத்தங்கள் செய்ய முன்வருவதால் குறைகள் இருப்பதாக அர்த்தமில்லை ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தின்போது, மாநிலங்களவையில் வேளாண் சட்டங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நேற்று இந்த விவாதத்துக்கு பதில் அளித்து பேசுகையி்ல், ‘‘விவசாயிகளின் நலனில் மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளது. அதனால்தான், குறைந்தபட்ச ஆதார விலை அடிப்படையில், மண்டி அமைப்பை பின்பற்றி வேளாண் பொருட்களை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து வருகிறது. மண்டிகள் மூலம் விற்கப்படுவதற்கு மாநில அரசுகள் விதிக்கும் வரிகளை எதிர்த்து தான் விவசாயிகள் போராட்டம் நடத்த வேண்டும். ஆனால், இது போன்ற வரிகளில் இருந்து காப்பாற்றப்படுவதை எதிர்த்து அவர்கள்  போராட்டம் நடத்துவது விந்தையாக இருக்கிறது. வேளாண் சட்ட விவகாரத்தில் பஞ்சாப் விவசாயிகள் மட்டுமே தூண்டப்பட்டு, தவறாக வழி நடத்தப்படுகின்றனர். இந்த சட்டங்கள் குறித்து குறை கூறும் எதிர்க்கட்சியினரால், அதில் குறைகள் இருப்பதாக சுட்டிக் காட்ட முடியவில்லை. இச்சட்டங்களில் திருத்தம் கொண்டு வர அரசு முன்வந்திருப்பதால், அவற்றில் குறைகள் இருப்பதாக அர்த்தமில்லை,’’ என்றார்.

வெளிநாட்டினர் ஆதரிப்பதில் என்ன தவறு?

விவசாயிகள் போராட்டத்துக்கு பாப் பாடகி ரிகானா, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் ஆதரவு அளித்திருப்பதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இது பற்றி பாரதிய கிசான் சங்க தலைவர் ராகேஷ் திகய்த்திடம் நேற்று கேட்டபோது, ‘‘எங்கள் போராட்டத்துக்கு வெளிநாட்டு பிரபலங்கள் ஆதரவு அளிப்பதில் என்ன தவறு இருக்கிறது? இதனால், அரசுக்கு என்ன பிரச்னை? அவர்கள் எங்களிடம் இருந்து எதையும் எடுத்து செல்லவில்லை. எங்களுக்கு எதுவும் வழங்கவும் இல்லை,’’ என்றார்.

இளைஞர் குடும்பத்தினர் மீது வழக்கு

டெல்லியில் குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் பேரணியின் போது டிராக்டர் கவிழ்ந்து விவசாயி நவ்ரீத் சிங் உயிரிழந்தார். அவரது இறுதி ஊர்வலத்தின்போது,  அவரது உடல் மீது தேசியக்கொடி போர்த்தப்பட்டிருந்தது. இதனை பார்த்த போலீசார், நவ்ரீத் சிங்கின் தாயார், சகோதரர் உள்பட 3 பேர் மீது நேற்று எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். விதிகளின்படி, சாதாரண குடிமகனின் இறுதி சடங்கில் தேசியக்கொடியை பயன்படுத்துவது குற்றமாகும்.

Related Stories:

>