மழை சேதம் குறித்து டெல்டாவில் 2வது நாளாக ஆய்வு: மத்திய குழுவிடம் விவசாயிகள் சரமாரி கேள்வி

* ஆறுதல் சொல்ல கூட காலம் தாழ்த்தி வரவேண்டுமா

* இறப்பதற்கான அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளதா?

நாகை: தொடர் பெய்த மழையால் நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தில் சேதமான பயிர்களை மத்திய குழுவினர் நேற்று பார்வையிட்டபோது, விவசாயிகள் கண்ணீருடன் சரமாரி கேள்வி கேட்டனர். புதுகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டத்தில் கனமழையால் பாதித்த பயிர்களை மத்திய குழுவினர் நேற்றுமுன்தினம் ஆய்வு செய்தனர். இந்நிலையில் நாகை மாவட்டத்தில் பாதித்த பயிர்களை மத்திய மீன்வளத்துறை மேம்பாட்டு ஆணையர் பவுல் பாண்டியன் தலைமையில் மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து மற்றும் அமைச்சக மண்டல மேலாளர் ரனஞ்சய்சிங், மத்திய மின்சார ஆணைய உதவி ஆணையர் ஷீபம்கார்க் ஆகியோர் அடங்கிய மத்திய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.வேளாங்கண்ணி அருகே கருங்கண்ணி பகுதியில் மழையால் பாதித்த பயிர்களை பார்வையிட்டனர். அப்போது விவசாயிகள் குமார், ஸ்ரீதர் ஆகியோர் கண்ணீர் மல்க கூறியதாவது: மழை பெய்து வயல்கள் தண்ணீரில் மூழ்கி இருந்தபோது உள்ளூர் அமைச்சர், முதல்வர் என அனைவரும் வந்து பார்வையிட்டனர். அப்போது ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் கேட்டோம்.

ஆனால், எக்டேருக்கு ரூ.20 ஆயிரம் மட்டுமே அறிவிக்கப்பட்டது. இயற்கை இடர்பாடு காலங்களில் மத்திய குழு, மாநில குழுக்கள் வந்து பார்வையிடுகிறது. ஆனால் விவசாயிகள் கேட்கும் நிவாரணம் கிடைப்பதில்லை. தற்போது வந்துள்ள மத்திய குழு, விவசாயிகளை வாழ வைக்கும் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளதா அல்லது இறப்பதற்கான அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளீர்களா என்று தெரியவில்லை. ஆறுதல் சொல்ல கூட இவ்வளவு காலம் தாழ்த்தி மத்திய குழுவினர் வந்துள்ளீர்கள். இதேநிலை நீடித்தால் விவசாயிகள் நடுத்தெருவுக்கு தான் வர வேண்டும் என்றனர். இதனைத்தொடர்ந்து நாகை அருகே பாலையூர் பகுதியில் சேதமடைந்த நெற்பயிர்களை வயல் வரப்பில் நின்று மத்திய குழுவினர் பார்வையிட்டனர். மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்ட பின்னர், சென்னைக்கு சென்றனர். இன்று (6ம்தேதி) டெல்லி புறப்பட்டு செல்லும் மத்திய குழுவினர், மத்திய அரசிடம் 2 நாள் ஆய்வு குறித்த அறிக்கை அளிக்க உள்ளனர்.

Related Stories:

>