4வது நாளாக தங்கம் விலை சரிவு: சவரன் 35640க்கு விற்பனை

சென்னை: மத்திய அரசின் பட்ஜெட் கடந்த 2ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதில் தங்கத்திற்கான இறக்குமதி வரி இரண்டரை சதவீதமாக குறைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அன்று மாலை தங்கம் விலை சவரனுக்கு 480 குறைந்து ஒரு சவரன் 36,520க்கும் விற்கப்பட்டது. 3ம் தேதி சவரனுக்கு 288 குறைந்து ஒரு சவரன் 36,232க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் சவரனுக்கு 368 குறைந்து ஒரு சவரன் 35,864க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று 4வது நாளாக தங்கம் விலை சரிவை சந்தித்தது. அதாவது, கிராமுக்கு 28 குறைந்து ஒரு கிராம் 4,455க்கும், சவரனுக்கு 224 குறைந்து, ஒரு சவரன் 35,640க்கும் விற்கப்பட்டது. 4 நாட்களில் மட்டும் தொடர்ச்சியாக சவரனுக்கு 1360 அளவுக்கு குறைந்துள்ளது. இந்த மாதங்களில் திருமணம் உள்ளிட்ட விஷேச தினங்கள் அதிக அளவில் வருகிறது. இந்த நேரத்தில் தங்கம் விலை குறைவு நகை வாங்குவோருக்கு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விலை குறைவால் நகைக்கடைகளில் விற்பனை அதிகரித்து வருவதாகவும் நகை வியாபாரிகள் கூறியுள்ளனர்.

இது குறித்து சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறுகையில், ” பங்கு சார்ந்த வர்த்தகத்தில் பெருமளவில் முதலீடுகள் நடைபெற்று வருகிறது. இதனால் உலக முதலீட்டாளர்கள் முதலீடு தங்கத்தின் மீது குறைந்துள்ளது. இந்த வாரம் தொடக்கத்தில் மத்திய அரசு பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைத்ததன் காரணமாக குறைந்தது. இப்போது தொழிற்சார்ந்த பங்குகள் பெருமளவில் முதலீடுகளை ஈர்ப்பதால் தங்கத்தின் மீது முதலீடு குறைந்துள்ளது. இதனால், உலக சந்தையில் பெருமளவில் தங்கம் விலை குறைந்துள்ளது. இன்னும் சற்று குறையும். அடுத்த வாரத்தில் இருந்து தங்கம் விலை மீண்டும் உயர தொடங்கி விடும்” என்றார்.

Related Stories:

>