×

7 பேர் விடுதலை குறித்து குடியரசு தலைவரை சந்திக்க முதல்வருடன் செல்ல திமுக எம்பிக்கள் தயார்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை:   திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:  பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையில் திமுக அரசியல் நாடகம் நடத்துகிறது என்று தமிழக சட்டமன்றத்தில் கூறி, 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் ஏழு பேரின் உணர்வுகளை கொச்சைப்படுத்தியிருப்பதுடன், மெகா பொய்யையும் அவிழ்த்து விட்டிருக்கும் முதல்வர் பழனிசாமிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.  2011ல் ஆட்சிக்கு வந்தவுடன், “இவர்களின் தண்டனையைக் குறைக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை” என்று இதே சட்டமன்றத்தில் பேசியவர்தான் மறைந்த ஜெயலலிதா. முதலில் அதிகாரம் இல்லை என்ற ஜெயலலிதா பிறகு, 2014 நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து-தேர்தல் நடத்தை விதிமுறைகள் செயல்பாட்டுக்கு வரும் சில வாரங்களுக்கு முன்பு, இந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். பிறகு திடீரென்று 2016 சட்டமன்றத் தேர்தல் நேரத்தில்-மார்ச் மாதத்தில், மீண்டும் இந்த விடுதலை பற்றிய பழைய நாடகத்தையே துவக்கினார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இப்பிரச்னையை கையிலெடுத்த முதல்வர் பழனிசாமி, செப்டம்பர் 2018ல் “பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும்” என்று அமைச்சரவை தீர்மானம் போட்டு அனுப்பினார். அது கூட உச்ச நீதிமன்றம் தலையிட்ட பிறகு தான். இப்போது 2021 சட்டமன்றத் தேர்தல் வருகிற நேரத்தில் தான், மீண்டும் இந்த ஏழு பேரின் விடுதலை முதல்வர் பழனிசாமியின் நினைவுக்கு வந்திருக்கிறது. ஜனவரி 25ம் தேதியே தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை ஆளுநர் நிராகரித்து, “எனக்கு அதிகாரம் இல்லை” என்று கூறிய பிறகு-ஜனவரி 29ம் தேதி  அவரைச் சந்தித்து “ஏழு பேரையும் விடுதலை செய்யும் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளியுங்கள்” எனக் கடிதம் கொடுத்ததாகக் கூறியிருக்கிறார்.

10 ஆண்டுகாலமாக இந்த விடுதலையில் பம்மாத்து பண்ணிக் கொண்டிருக்கும் அதிமுக ஆட்சியின் தவறை மூடி மறைக்க-சிறையில் அடைக்கப்பட்ட 8 ஆண்டு காலத்திற்குள் தூக்குத் தண்டனையை ரத்து செய்த திமுகவைப் பார்த்து நாடகம் போடுகிறது என்று கூற பழனிசாமிக்கு நா கூச வேண்டாமா? நெஞ்சில் நெருடல் ஏற்பட வேண்டாமா?  நாடாளுமன்ற திமுக உறுப்பினர்களின் உதவி தேவை என்றால் சொல்லுங்கள். நாளைக்கே குடியரசு தலைவரைச் சந்திக்க முதல்வர் சென்றாலும் உடன் வரத் தயாராக இருக்கிறார்கள் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : MPs ,DMK ,release ,Republican ,announcement ,MK Stalin , DMK MPs ready to accompany PM on release of 7
× RELATED டெல்லியில் தலைமைத் தேர்தல்...