×

தள்ளுபடி ஆனதால் திருப்பி தர முடியாது என மிரட்டல் குமரியில் கூட்டுறவு சங்க கடன் தொகை அபகரிப்பு மகளிர் சுய உதவிக்குழு தலைவி மீது இளம்பெண்கள் புகார்

நாகர்கோவில், மார்ச் 9: கூட்டுறவு கடன் சங்கத்தில் வாங்கிய கடன் தொகையில் இருந்து கடன் வாங்கிய மகளிர் சுய உதவிக்குழு நிர்வாகி, தற்போது அந்த கடன் தொகை தள்ளுபடியானதால் உறுப்பினர்களுக்கு திருப்பி தர முடியாது என கூறி மிரட்டுவதாக எஸ்.பி.யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே ஆடராவிளை உள்பட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த இளம்பெண்கள் சிலர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேற்று அளித்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது: எங்கள் பகுதியை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட பெண்கள் இணைந்து மகளிர் சுய உதவி குழுவை தொடங்கினோம். அனைவரும் சிறுக, சிறுக சேமித்து பணத்தை ஈத்தாமொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சேமித்து வந்தோம். ஒவ்வொருவரின் தனித்தனியான வங்கி கணக்கில் ரூ.500 செலுத்தி கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தோம். நாளடைவில் எங்களுக்கு கடன் தரவும் வங்கி சம்மதித்தது. அதன்படி நாங்கள் தனித்தனியாக வங்கியில் இருந்து கடன் பெற்றோம். ஒவ்வொருவரின் பெயரிலும் தலா ரூ.94,000 வீதம் கடன் பெறப்பட்டது. நாங்கள் பெற்ற கடன் தொகையை வைத்து எங்களது தேவைகளை நிறைவேற்றுவதற்காக திட்டமிட்டு இருந்தோம்.இந்த நிலையில் எங்கள் குழுவில் தலைவர் பொறுப்பில் இருந்த பெண் எங்கள் குழுவை சேர்ந்த பெண்கள் சிலரிடம், மகளுக்கு திருமணம் வைத்திருப்பதாகவும், திருமண செலவுக்கு பணம் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து எங்களில் சிலர் வங்கியில் வாங்கி வைத்திருந்த கடன் தொகையை அவருக்கு கொடுத்து உதவினோம். இவ்வாறாக சுமார் ரூ.4 லட்சம் வரை கடன் வாங்கினார். இதற்காக ஒரு மாதம் மட்டுமே தவணை தொகையை வழங்கினார். இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தலில் அறிவித்த தேர்தல் வாக்குறுதி அடிப்படையில், திமுக ஆட்சி வந்ததும் கூட்டுறவு சங்கங்களில் மகளிர் குழுவினர் வாங்கி இருந்த கடன்களை தமிழ்நாடு அரசு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அந்த அடிப்படையில் எங்கள் மகளிர் குழுவினர் வாங்கி இருந்த கடன் தொகையும் தள்ளுபடி செய்யப்பட்டது. இது பற்றி அறிந்த மகளிர் சுய உதவி குழு தலைவி, தற்போது எங்களிடம் வாங்கிய கடன் தொகையை நான் திருப்பித் தர மாட்டேன். கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதால், நான் எப்படி தர முடியும் என்று தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டி வருகிறார். எங்களிடமிருந்து அவசர தேவைக்காக கடன் பெற்றுவிட்டு தற்போது அந்தத் தொகையை தர மறுப்பது மிகப்பெரிய சட்டவிரோதமாகும். கூட்டுறவு சங்கத்தில் நாங்கள் வாங்கிய கடன் தொகையை அபகரித்து விட்டு தர மறுக்கும் மகளிர் சுய உதவி குழு தலைவி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறி உள்ளனர். தற்போது இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.பல இடங்களில் தகராறு மாவட்டம் முழுவதும் இதே போல் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகளிர் குழுவில் கடன் வாங்கி இருந்தவர்கள், அந்த தொகையை மகளிர் குழுவில் இருந்த  பெண்களுக்கும், அக்கம் பக்கத்தில் தெரிந்த நபர்களுக்கும், உறவினர்களுக்கும் கடனாக கொடுத்திருந்தனர். தற்போது மகளிர் குழு கடன் தள்ளுபடியானதால், கடன் பெற்றவர்கள் அந்த கடன் தொகையை தர முடியாது என கூறி வருகிறார்கள். இதனால் பல இடங்களில் தகராறு ஏற்பட்டு, காவல் நிலையங்களிலும் இது போன்ற புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. எந்த வித அத்தாட்சி ஆவணமும் இல்லாமல் கொடுக்கப்பட்ட கடன் தொகையை எப்படி வசூலிக்க முடியும் என்ற நிலையில் கடன் கொடுத்தவர்கள் தவித்து வருகிறார்கள்….

The post தள்ளுபடி ஆனதால் திருப்பி தர முடியாது என மிரட்டல் குமரியில் கூட்டுறவு சங்க கடன் தொகை அபகரிப்பு மகளிர் சுய உதவிக்குழு தலைவி மீது இளம்பெண்கள் புகார் appeared first on Dinakaran.

Tags : Kumari ,Nagercoil ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...