×

அருமனையில் உட்கட்சி மோதல் பா.ஜ. சிறுபான்மை பிரிவு நிர்வாகி மீது சைக்கிள் செயினால் தாக்குதல் மற்றொரு நிர்வாகி , கூட்டாளிகள் மீது வழக்கு

அருமனை, மார்ச் 9: அருமனையில் பாரதிய ஜனதா கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்னையில், சிறுபான்மை  பிரிவு நிர்வாகியை சைக்கிள் செயின் கொண்டு தாக்கிய சம்பவத்தில் மற்றொரு பா.ஜ. நிர்வாகி, கூட்டாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டம் அருமனை பள்ளிவிளை பகுதியை சேர்ந்தவர் ஜெஸ்லி (35). ரியல் எஸ்டேட்  தொழில் செய்து வருகிறார். பாரதிய ஜனதா கட்சியின் குமரி மாவட்ட சிறுபான்மை பிரிவில் செயற்குழு உறுப்பினராக இருந்தார். ஜெஸ்லிக்கும், அருமனை பேரூராட்சி பகுதி பாரதிய ஜனதா கட்சி தலைவராக இருக்கும் சுஜிக்கும் (48) இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் சமீபத்தில் ஜெஸ்லி தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். வீடியோவில் தோன்றி பேசிய ஜெஸ்லி, பா.ஜ கட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், பா.ஜ. நிர்வாகிகள் சிலர் பணம் வாங்கிகொண்டு உறுப்பினர் அட்டையை விநியோகம் செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.  இதுதொடர்பாக தன்னிடம் பல ஆதாரங்கள் உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட நிர்வாகி மீது பாஜ கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வியுடன் வீடியோ பதிவு செய்திருந்தார். அந்த வீடியோவில் அருமனை பேரூராட்சி பாரதிய ஜனதா கட்சி தலைவர் சுஜியின் பெயரையும் குறிப்பிட்டு அவர் முறைகேடு செய்வதாக கூறியிருந்தார்.இந்த நிலையில் சம்பவத்தன்று அருமனை சந்திப்பு பகுதியில் ஜெஸ்லி நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு சுஜி, அவரது நண்பர் சதீஷ் மற்றும் சிலர் கும்பலாக வந்து ஜெஸ்லியை சரமாரியாக தாக்கினர். சைக்கிள் செயின் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதில் ஜெஸ்லிக்கு வயிறு, தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து ஜெஸ்லி அருமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் சுஜி, சதீஷ் மற்றும்  கண்டால் தெரியும் நபர்கள் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 147 (சட்ட விரோதமாக கூடுதல்), 148 (கையில் ஆயுதம் வைத்திருத்தல்), 294 (பி), (ஆபாசமாக ேபசுதல்), 324 (மரணத்தை ஏற்படுத்தும் வகையில் உடல் உறுப்புகளில் தாக்குதல்), 323 (காயங்கள் ஏற்படுத்துல்), 506 (ii) (ஆயுதத்தை காட்டி மிரட்டல் விடுத்தல்)  உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.இதேபோல் சுஜி தரப்பிலும் அருமனை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பாஜகவின் உட்கட்சி விவகாரத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு கட்சிக்கு அவதூறு பரப்பியதாக ஜெஸ்லியை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஏற்கனவே ஆபாச ஆடியோ, சேட்டிங் என முக்கிய பொறுப்புகளில் உள்ள பா.ஜ. நிர்வாகிகள் சிக்கி வரும் நிலையில், உட்கட்சி பிரச்னையில் பா.ஜ. நிர்வாகி மீது வழக்குப்பதிவு, நீக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் குமரி பாரதிய ஜனதாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

The post அருமனையில் உட்கட்சி மோதல் பா.ஜ. சிறுபான்மை பிரிவு நிர்வாகி மீது சைக்கிள் செயினால் தாக்குதல் மற்றொரு நிர்வாகி , கூட்டாளிகள் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Arumanai ,Bharatiya Janata Party ,Arumanai BJP ,Dinakaran ,
× RELATED பாஜகவில் இணைந்தார் கவுரவ் வல்லப்