கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு: ரூ. 2,600 கோடிக்கு கணக்கு காட்டவில்லை: ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: கேரளாவில் பரவிய நிபா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு வழங்கிய ₹2,600 கோடிக்கான கணக்கை கேரளா வழங்கவில்லை என பாஜ தேசிய தலைவர் ேஜ.பி.நட்டா தெரிவித்துள்ளார். கேரளாவில் பாஜ சார்பில் தேர்தல் பிரசாரம் கடந்த 3ம் தேதி தொடங்கியது. இதற்காக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 2 நாள் பயணமாக 3ம் தேதி வந்தார். பின்னர் நேற்று திருச்சூர் தேக்கின்காடு மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: கேரள அரசு ஆரம்பத்தில் கொரோனா பரவலை சிறப்பாக கட்டுப்படுத்தியது. அப்போது பிரதமர் நரேந்திர மோடி கொரோனா கட்டுப்படுத்துதலில் மற்ற மாநிலங்கள் கேரளாவை பார்த்து நடந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.  

தற்போது இந்தியாவில் ெகாரோனா பாதிக்கப்பட்டவர்களில் பாதி பேர் கேரளாவில் தான் உள்ளனர். மற்ற இடங்களில் கொரோனா பாதிப்பு, இறப்பு விகிதங்கள் குறைவாக இருக்கும்ேபாது, கேரளாவில் பாதிப்பு விகிதம் 12 சதவீதமாக உள்ளது. கேரளாவில் இடதுசாரி, காங்கிரஸ் கூட்டணிகளுக்கு ஓய்வு அளித்து பாஜவுக்கு வேலை கொடுக்க வேண்டிய நேரம் இது. சோலார் மீது ஆர்வமுள்ள முன்னாள் முதல்வர், தங்கத்தில் ஆர்வம் கொண்டுள்ள இந்நாள் முதல்வர். இவை இரண்டிலும், ஊழலை விட பெண்களின் பிரச்னையே அதிகம்.

இந்த இரு கூட்டணிகளிலும் ஊழல், மோசடிகளின் பட்டியல் உள்ளது. சபாநாயகர் ராமகிருஷ்ணன் கூட தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து மோசடி செய்துள்ளார். சபரிமலை பிரச்னையில் காங்கிரஸ் பின்னால் இருந்து இயக்கி வருகிறது. அப்போதும், ​​இப்போதும் பாஜ மட்டுமே சரியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. கேரளாவில் பரவிய நிபா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு வழங்கிய ரூ.2,600 கோடிக்கான கணக்கை கூட கேரளா வழங்கவில்லை. இவ்வாறு ஜே.பி.நட்டா பேசினார்.

கேரளாவில் நிபா வைரஸ் பாதிக்கப்பட்டபோது ஜே.பி.நட்டா மத்திய சுகாதார அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக காலையில், மாநிலத்தின் 140 தொகுதிகளில் தேர்தல் பொறுப்பாளர்கள், ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்களுடனும் கலந்துரையாடினார். ேமலும் சமூக தலைவர்களையும் அவர் சந்தித்தார்.

Related Stories: