சத்தியமங்கலம் அருகே வனப்பகுதியில் 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு ‘குவா குவா’

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமத்தில் வசிக்கும் மக்கள் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு வந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த நிலையில் கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள கோட்டமாளம் வெள்ளை தொட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி கிருஷ்ணன் என்பவரது மனைவி கிருஷ்ணம்மாள்(25). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு இன்று அதிகாலை அவருக்கு கடுமையான பிரசவ வலி ஏற்பட்டது. இதை தொடர்ந்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதன் பேரில் கடம்பூரிலிருந்து 108 ஆம்புலன்ஸ்  வெள்ளை தொட்டி கிராமத்துக்கு வந்தது. அங்கு பிரசவ வலியால் துடித்த கிருஷ்ணம்மாளை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை செல்வதற்காக வந்து கொண்டிருந்தனர். அடர்ந்த வனப்பகுதியில் வருபோது பிரசவ வலி தாங்க முடியாமல் கிருஷ்ணம்மாள் துடித்தார். உடனே ஆம்புலன்சை அங்கேயே நிறுத்திவிட்டு பணியில் இருந்த மருத்துவ உதவியாளர் சங்கர் பிரசவம் பார்த்தார். இதில் கிருஷ்ணம்மாளுக்கு  பெண் குழந்தை பிறந்தது. இதை தொடர்ந்து தாய் மற்றும் குழந்தையை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குள்ள பிரசவ வார்டில் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>