2015-ல் நடந்த சம்பவம்: சச்சின் மீது ஆத்திரமடைந்த கேரள நெட்டிசன்கள் மரியா ஷரபோவாவிடம் மன்னிப்பு..!!!

திருவனந்தபுரம்: கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மீது ஆத்திரமடைந்த கேரள நெட்டிசன்கள், ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவின் ட்விட்டர் கணக்கை டேக் செய்து மன்னிப்பு கேட்டுள்ளனர். டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக உலகளவில் சில பிரபலங்கள் கருத்து வரும்நிலையில் பிரபல பாடகியும், கலைஞருமான ரிஹானா மற்றும் ஸ்வீடன் நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் உள்ளிட்டோர் விவசாயிகளுக்கு ஆதரவாக தங்கள் டுவிட்டரில் கருத்து தெரிவித்தனர்.

ஆனால், விவசாயிகள் போராட்டத்தில் வெளிநாட்டு பிரபலங்கள் கருத்து தெரிவிப்பதற்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

இந்தியாவின் இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது. வெளிப்புற சக்திகள் பார்வையாளர்களாக இருக்கலாம்; ஆனால் பங்கேற்பாளர்கள் அல்ல. இந்தியர்களுக்கு இந்தியாவை தெரியும், ஒரே நாடாக ஒற்றுமையுடன் இருக்கட்டும் என்று பதிவிட்டிருந்தார். இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் காரசார கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, கடந்த 2015-ம் ஆண்டில் டென்னிஸ் வீராங்கனை மரிய ஷரபோவா, தனக்கு சச்சின் டெண்டுல்கர் யாரென்று தெரியாது எனத் தெரிவித்திருந்தார். அதற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் அவருக்குக் கண்டனம் தெரிவித்திருந்தார்கள்.

ஆனால், தற்போது விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்த வெளிநாட்டு பிரபலங்களுக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்ததால், ஆத்திரமடைந்த சச்சின் ரசிகர்கள் அவரைக் கடுமையாக சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

குறிப்பாக, 2015-ம் ஆண்டு சச்சின் டெண்டுல்கரை தெரியாது என்றுக்கூறிய வீராங்கனை மரியா ஷரபோவாவிடம், நடந்துகொண்ட முறைக்கு நெட்டிசன்கள் மன்னிப்பு கோரியுள்ளனர். மலையாள நெட்டிசன் ஒருவர், “ஷரபோவா, நீங்கள் சச்சினைப் பற்றி சரியாகத்தான் கூறியுள்ளீர்கள். தரமான மனிதர் இல்லை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். மேலும், கேரளத்தைச் சேர்ந்த பல நெட்டிசன்கள், மரியா ஷரபோவாவிடம் மன்னிப்பு கேட்டதோடு மட்டுமல்லாமல், கடவுளின் சொந்த நாடான கேரளாவுக்கு வர வேண்டும், கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தபின் திருச்சூர் பூரம் பண்டிக்கைக்கு வாருங்கள் என அழைப்பு விடுத்தனர்.

மரியா ஷரபோவாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் நெட்டிசன் ஒருவர் பதிவிட்ட கருத்தில், மன்னித்துக் கொள் மரியா. நீங்கள் பெரிய லெஜண்ட். சச்சினை எங்களுக்கு வீரராகத்தான் தெரியும். ஆனால், ஒரு மனிதராகத் தெரியாது. ஆனால், நீங்கள் சரியாகத்தான் கணித்தீர்கள். உங்களைத் தவறாகப் பேசியதற்கு மன்னிக்கவும்” எனத் தெரிவித்திருந்தார். ஆயிரக்கணக்கான நெட்டிசன்கள் தன்னிடம் மன்னிப்பு கேட்பதை அறிந்த ஷரபோவா ட்விட்டரில், யாருக்கேனும் ஆண்டுகள் பற்றி ஏதேனும் குழப்பம் வந்துவிட்டதா எனக் கேட்டுள்ளார்.

Related Stories: