தமிழக சட்டமன்ற தேர்தல்: குமரியில் மலராத தாமரை

நாகர்கோவில்: தமிழகத்தில் 1996ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட பா.ஜ. பத்மநாபபுரம் தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. அந்த கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேலாயுதன் முதல் முறையாக சட்டமன்றத்துக்குள்  நுழைந்தார். அதன் பிறகு தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்து பார்த்த போதிலும் குமரி மாவட்டத்தில் இருந்து இதுவரை தமிழக சட்டமன்றத்துக்குள் பாஜவால் நுழைய முடியவில்லை.

தமிழகத்தில் 2016 சட்டமன்ற தேர்தலில் பா.ஜ. பல்வேறு தொகுதிகளில் 3ம் இடத்தையும், சில தொகுதிகளில் 2ம் இடத்தையும் பெற்றது. ஆனால் 2014 பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ. வெற்றிபெற்ற ஒரே மக்களவை தொகுதியான  கன்னியாகுமரியில் 2 ஆண்டுக்கு பிறகு 2016ல் சட்டமன்ற தேர்தல் நடந்த போது ஒரு சட்டமன்ற தொகுதியை கூட கைப்பற்ற இயலாத நிலை ஏற்பட்டது.கடந்த மக்களவை தேர்தலில் இருந்த போது காணப்பட்ட எழுச்சியும், மவுசும் குறைந்து  போனதும் அதன் வாக்கு வங்கி சரிந்ததும் தேர்தல் முடிவுகள் மூலம், பெற்ற வாக்குகள் வாயிலாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த 2014 மக்களவை தேர்தலில் 3 லட்சத்து 72 ஆயிரத்து 906 வாக்குகள் பெற்று கன்னியாகுமரி தொகுதியில் இருந்து பா.ஜ. சார்பில் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால் பா.ஜ.வுக்கு 2016 சட்டமன்ற  தேர்தலில் 6 தொகுதிகளிலும் சேர்த்து 2 லட்சத்து 10 ஆயிரத்து 919 வாக்குகள் மட்டுமே கிடைத்திருந்தது. கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் குமரி மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் போட்டியிட்ட பா.ஜ.வுக்கு 1 லட்சத்து 94 ஆயிரத்து 195 வாக்குகள்  கிடைத்திருந்தன. அதனைவிட 2016 தேர்தலில் 16 ஆயிரத்து 724 வாக்குகள் மட்டுமே அதிகம் கிடைத்திருந்தது.

2011 சட்டமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகளை கூட 2016 தேர்தலில் பா.ஜ.வினால் பெற முடியாத நிலையும் குமரி மாவட்டத்தில் காணப்பட்டது. அந்த வகையில் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட தர்மராஜ் 35 ஆயிரத்து 646  வாக்குகள் பெற்றிருந்தார். ஆனால் கடந்த 2011 தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்ட ஜெயசீலன் 37 ஆயிரத்து 763 வாக்குகள் பெற்றிருந்தார்.

இதனை போன்று கிள்ளியூர் தொகுதியில் போட்டியிட்ட பொன்.விஜயராகவனுக்கு 31 ஆயிரத்து 61 வாக்குகள் மட்டுமே கிடைத்திருந்தது. ஆனால் இங்கு 2011 தேர்தலில் போட்டியிட்ட சந்திரகுமார் 32 ஆயிரத்து 446 வாக்குகள் பெற்றிருந்தார்.  பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிட்ட ஷீபா பிரசாத்க்கு 31 ஆயிரத்து 994 வாக்குகள் கிடைத்திருந்தது. ஆனால் 2011ல் போட்டியிட்ட சுஜித்குமாருக்கு 32 ஆயிரத்து 491 வாக்குகள் கிடைத்திருந்தது.

கடந்த 2019 மக்களவை தேர்தலில் பா.ஜ சார்பில் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணனுக்கு 3 லட்சத்து 58 ஆயிரத்து 507 வாக்குகள் கிடைத்திருந்தது. இது 2014ம் ஆண்டு அவருக்கு கிடைத்த வாக்குகளைவிட கணிசமான குறைவு ஆகும்.  தமிழகத்தில் பா.ஜ வெற்றிபெறும் தொகுதிகளில் குமரி மாவட்டத்தில் சாத்தியக்கூறுகள் இருந்த போதிலும் அது கிடைக்காமல் போனதற்கு இந்த வாக்குவங்கியின் சரிவும் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற்று தருவதாக பா.ஜ. சார்பில் தமிழகம் முழுவதும் தாமரை யாத்திரை நடந்தது. குமரி மாவட்டத்தில் ஜூலை போராட்டம் என்ற பெயரில் பெரும் மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடந்தது.  ஆனால் மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைந்தும் ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை என்பதில் மக்களுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. இது குமரி மாவட்டத்தில் பா.ஜ.வுக்கு மிகப்பெரிய சறுக்கலாக  இன்றளவிலும் பார்க்கப்படுகிறது.

Related Stories:

>