×

பிரசவத்தில் தாய், சேய் உயிரிழப்பு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்

குடும்பத்தினர் கலெக்டரிடம் மனு விருதுநகர், மார்ச் 14: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரியில் பிரசவத்தின்போது தாய், சேய் உயிரிழந்ததால் நிவாரணம் வழங்க வேண்டும் என குடும்பத்தினர் கலெக்டரிடம் மனு அளித்தனர். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் சிவகாசி பாரதி நகரை சேர்ந்த பன்னீர் செல்வம் தனது குடும்பத்தினருடன் நேற்று மனு அளிக்க வந்தார். கலெக்டரிடம் அளித்த மனுவில், பட்டாசு ஆலையில் தினக்கூலியாக வேலை செய்து வருகிறேன். சிவகாசியை சேர்ந்த முத்துமாரியுடன் 14 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. முதல் குழந்தை பிறந்த ஒரு மாதத்தில் உயிரிழந்து விட்டது. 10 ஆண்டுகள் கழித்து கர்ப்பமான நிலையில், கடந்த பிப்.22 காலை 10.15 மணிக்கு சிவகாசி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு மனைவி சேர்க்கப்பட்டார்.மருத்துவர்கள் அறிவுறுத்தல்படி விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்கு அனுமதித்தோம். விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரியில் பிப்.23 மாலை 3 மணிக்கு கடுமையான ரத்த போக்கு ஏற்பட்டபோது, அறுவை சிகிச்சை செய்து பிரசவம் பார்க்கும் படி கூறினோம். மருத்துவர்கள் அலட்சியத்தால் பிப்.24 அதிகாலை 4.30 மணிக்கு கர்ப்பப்பை வெடித்து தாயின் வயிற்றிலேயே இறந்து விட்டதாக கூறி, குழந்தையை அறுவை சிகிச்சை செய்து எடுத்து பிணமாக வழங்கினர். குழந்தையை சிவகாசி கொண்டு சென்று அடக்கம் செய்ய சென்ற போது, மனைவிக்கு அதிக ரத்த போக்கு ஏற்பட்டு இருப்பதாகவும் 8 பாட்டில் ரத்தம் ஏற்ற இருப்பதாகவும் தெரிவித்தனர்.குழந்தையை அடக்கம் செய்து மதியம் 1 மணிக்கு வந்த நிலையில், மனைவி முத்துமாரிக்கு செயற்கை சுவாசம் அளிப்பதாக கூறினர். மதியம் 3 மணிக்கு மருத்துவர்களிடம் வாக்குவாதம் செய்து முத்துமாரியை பார்த்த போது கை, கால் குளிர்ந்த நிலையில் பிணமாக இருந்தார். முத்துமாரி முன்பே இறந்திருந்த நிலையில், மனைவியின் மரணத்தை மறைத்துள்ளனர். கிழக்கு போலீசில் அளித்த புகாரின் பேரில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கலெக்டர் தலையிட்டு மனைவி முத்துமாரி, குழந்தை என இருவர் இறப்பிற்கு காரணமான மருத்துவர்கள், செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுத்து, கருணை அடிப்படையில் நிவாரணம், அரசு வேலை வேண்டும் என தெரிவித்துள்ளனர்….

The post பிரசவத்தில் தாய், சேய் உயிரிழப்பு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Virudhunagar Government Medical College ,
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...