மழை காரணமாக அரவக்குறிச்சி பகுதியில் முருங்கைகாய் வரத்து குறைவால் அதிக விலைக்கு விற்பனை

அரவக்குறிச்சி : அரவக்குறிச்சி பகுதியில் முருங்கைகாய் மழையின் காரணமாக பூக்கள் உதிர்ந்து அறுவடை மிகவும் குறைந்துள்ளது. இதனால் சந்தைக்கு முருங்கை வரத்து குறைந்துள்ளது. இதனால் ஒரு கிலோ 250க்கு விற்கப்படுகின்றது.கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியில் ஈசநத்தம், ஆலமரத்துப்பட்டி, சாந்தப்பாடி, கோவிலூர், நாகம்பள்ளி, வெஞ்சமாங்கூடலூர் உள்ளிட்ட 20 ஊராட்சிகளில் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் முருங்கை பயிரிடப்படுகின்றது. இப்பகுதி முருங்கைக்காய் திரட்சியாகவும், சுவையாகவும் இருக்கும் என்பதால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மட்டுமல்லாமல், கேரளா மற்றும் பெங்களூரு, புனே, மும்பை உள்ளிட்ட வட மாநிலங்களிலும் அரவக்குறிச்சி பகுதி முருங்கை காய்க்கு தனி மவுசு உள்ளது.

ஆகையால் மலைக்கோவிலூர், ஈசாத்தம், இந்திராநகர், பள்ளபட்டி பழனி சாலை உள்ளிட்ட மொத்த கொள்முதல் மையங்களிலிருந்து, முருங்கை மொத்த வியாபாரிகள் வாங்கி மற்ற இடங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக தொடர் மழையின் காரணமாக அரவக்குறிச்சி பகுதியில் முருங்கை விளைச்சல் குறைந்து அறுவடை மிகவும் குறைந்துள்ளது. இதனால் மொத்த விற்பனை சந்தைக்கு முருங்கைகாய் வரத்து மிகவும் குறைந்துள்ளது. சந்தைக்கு வரும் முருங்கை காய்களும் மழையினால் பழுத்து பழுப்பு நிறத்தில் உள்ளது. குறைவான வரத்து காரணமாக தற்போது முருங்கை கிலோ ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனையாகின்றது. சில்லரை விற்பனையில் ஒரு முருங்கைக்காய் ரூ.5க்கு விற்பனையாகின்றது.

Related Stories:

>