அகழிப் பாதை மூடல்

தேனி : தேனியில் கலெக்டர் அலுவலகம் பின்புறம் கால்நடைகள் நுழையாதபடி அகழி அமைக்கப்பட்டுள்ளது. இதன் நடுவே செல்ல பைப்புகள் பதிக்கப்பட்டுள்ளது. இந்த பைப்புகளுக்கு இடையே இடைவெளி அதிகமாக இருந்ததால், இதன் மீது நடந்து செல்பவர்கள் மற்றும் கால்நடைகளின் கால்கள் சிக்குவது வழக்கமாக  இருந்தது.

கடந்த மாதம் கலெக்டர் அலுவலகம் வந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், உருளை சாலையை கடந்தபோது, அவரது கால் உருளைக்குள் சிக்கிக்கொண்டது. அக்கம்பக்கத்தினர் நீண்ட நேரம் போராடி முதியவரை மீட்டனர். அதன்பின், ஒரு வாரத்திற்குள், அகழியை தாண்டிய ஒரு பசு மாட்டின் முன்னங்கால் உருளை பைப்புக்குள் சிக்கியது.

இதனால், மாடு கதறி துடித்தது. இதையடுத்து, அப்பகுதியை சேர்ந்தவர்கள் உருளையை நெம்புகோல் கொண்டு நெம்பி மாட்டின் காலை வெளியே எடுத்தனர். எனவே, அகழிச்சாலையை அகற்றமாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நமது தினகரன் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது.  இதன் எதிரொலியாக மாவட்ட நிர்வாகம், உருளை பைப்புகளுடன் கூடிய பாதையை அகற்றியதுடன் அகழியை மண் கொண்டு மூடினர்.

Related Stories:

>