103 கிலோ தங்கம் மாயமான விவகாரம்.: சுரானா நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை

சென்னை: 103 கிலோ தங்கம் மாயமான விவகாரத்தில் சென்னை சுரானா நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். சுரானா கார்ப்பரேஷன்  நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக தங்கம் இறக்குமதி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதைதொடர்ந்து தென் மண்டல சிபிஐ அதிகாரிகள் சுரானா கார்ப்பரேஷனில் 2012-ம் ஆண்டு சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் கணக்கில் வராத பலகோடி மதிப்புள்ள ஆவணங்கள் மற்றும் 400.47 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதைதொடர்ந்து சுரானா நிறுவனத்தின் மீதும் அந்த நிறுவனத்திற்கு துணையாக இருந்த அதிகாரிகள் மீதும் ஊழல் தடுப்பு சட்டம் மற்றும் கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளில் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட 400.47 கிலோ தங்கம் சுரானா நிறுவனத்தில் உள்ள லாக்கரில் வைத்து சீல் வைக்கப்பட்டது.

பின்னர் சீல் வைக்கப்பட்ட சுரானா நிறுவனத்தின் லாக்கர்களில் இருந்த தங்கத்தை எடை பார்த்த போது 296.606 கிலோ தங்கம் மட்டுமே இருந்தது. 103.864 கிலோ தங்கத்தை மாயமாகி இருந்தது. இதையடுத்து, சிபிஐ வசமிருந்து மாயமான 103.864 கிலோ தங்கத்தை ஒப்படைக்க கோரி  ராமசுப்பிரமணியன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி, மாயமான 103 கிலோ தங்கம் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து சிபிசிஐடி அதிகாரிகள் தங்களது விசாரணையை தொடங்கினர். தற்போது வரை சிபிசிஐடி அதிகாரிகள் இந்த விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சுரானா நிறுவனத்துக்கு சொந்தமான 5 இடங்களில் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

Related Stories:

>