உத்திரமேரூர் அருகே பயங்கர விபத்து: கல்குவாரியின் 250 அடி பள்ளத்தில் மண் சரிந்து வாலிபர் பலி: வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் படுகாயம்

சென்னை: உத்திரமேரூர் அருகே கல்குவாரியின் 250 அடி பள்ளத்தில் மண் சரிந்து வாலிபர் பலியானார். அவருடன் இருந்த 2 பேர் படுகாயமடைந்தனர். இந்த பயங்கர விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்திரமேரூர் அடுத்த மதூர் மற்றும் சுற்றியுள்ள மலை பகுதிகளில் பல்வேறு கல்குவாரிகள் செயல்படுகின்றன. இங்கிருந்து தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் திருமுக்கூடல், பழைய சீவரம் சாலை வழியாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு கற்களை ஏற்றி கொண்டு சென்று வருகின்றன. இங்குள்ள கல்குவாரி வாகனங்களால் கிராம சாலைகள் பழுதடைவதுடன், அடிக்கடி விபத்துகள் நடந்து உயிர் பலிகளும் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. கல்குவாரியை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் பல்வேறு அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் மதூர் கிராமத்தில் இயங்கும் தனியார் கல்குவாரியில் கற்கள் பெயர்த்தெடுக்கும் பணிக்காக லாரிகள் பொக்லைன் இயந்திரங்களை கொண்டு நத்தாநல்லூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (22), வடமாநிலத்தை சேர்ந்த சுரேஷ், தமீம்அன்சாரி உள்பட11 பேர் சுமார் 250 அடி ஆழம் உள்ள பகுதிக்கு சென்றனர். அப்போது பள்ளத்தின் அருகே ஊழியர்கள் வேலை செய்த பகுதியில் மேல் பகுதியில் மற்றொரு இயந்திரம் மூலம் ஜல்லிகளை அகற்றிக் கொண்டிருந்தனர். அப்போது 250 அடி உயரத்தில் இருந்து மொத்தமாக பாறைகள் சரிவு ஏற்பட்டு மொத்தமாக விழுந்தது. அதில் பள்ளத்தில் வேலை செய்து கொண்டிருந்த மணிகண்டன், மண் சரிவில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். அவருடன் இருந்த சுரேஷ், தமீம்அன்சாரி ஆகியோர் படுகாயமடைந்தனர். மற்றவர்கள், அங்கிருந்து வெளியேறினர்.

தகவலறிந்து சாலவாக்கம் போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, காயமடைந்தவர்களை சிகிச்சைக்காகவும், சடலத்தை பிரேத பரிசோதனைக்காகவும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து காஞ்சிபுரம் கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமார், டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று, பார்வையிட்டு, அங்கிருந்த ஊழியர்களிடம் விசாரித்தனர். தொடர்ந்து, மண் சரிவில் வேறு பணியாளர்கள் சிக்கியுள்ளார்களா என கண்டறிய பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு, 5 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மண் சரிவை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த மண் சரிவில் சுமார் 10 லாரிகள் 2 பொக்லேன் இயந்திரங்கள் என பல்வேறு வாகனங்கள் சிக்கியுள்ளன. மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

நூலிழையில் உயிர் தப்பிய வீரர்கள்: மண் சரிவு பகுதியில், பள்ளத்தில் இறங்கி கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆய்வு செய்தார். திடீரென மீண்டும் மண்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்களை போலீசார் அப்புறப்படுத்தினர். பின்னர் கலெக்டர் அங்கிருந்து வெளியேறினார். அதேபோல் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில்  மீட்பு பணியினை மேற்கொண்ட தீயணைப்பு வீரர்கள் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது திடீர் என மண் சரிவு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அவர்கள், விரைந்து வெளியேறினர். இதனால் தீயணைப்பு வீரர்கள் நூலிழையில் உயிர் தப்பினர்.    

2வது விபத்து கண்டுகொள்ளாத அதிகாரிகள்

இந்த கல் குவாரியின் உரிமையாளர்கள் சென்னையைச் சேர்ந்த சேகர், ஆறுமுகம், சரவணன், தேவ் மற்றும் 2 பேர். இவர்கள் 6 பேர் உரிமையாளர்கள் என்பதால் குவாரிக்கு ஆறுபடையப்பா என்று பெயர் வைத்துள்ளனர். இவர்களது பூர்வீகம் தஞ்சாவூர் மாவட்டம். இவர்களில் சிலர் சசிகலாவுக்கு நெருங்கிய உறவினர்கள் என்று கூறப்படுகிறது. 2012ம் ஆண்டிலும் அருகில் உள்ள இவர்களுக்குச் சொந்தமான குவாரியில் வெடி விபத்து நடந்தது.

அதில் 6 பேர் உயிரிழந்தனர். அதன்பின்னரும் தொடர்ந்து குவாரி இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆபத்தான நிலையில் குவாரி நடந்து கொண்டிருந்தாலும், கனிம வளத்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் ஒவ்வொரு மாதமும் பல லட்சம் ரூபாய் மாமூல் வாங்கிக் கொண்டு கண்டு கொள்ளாமல் இருந்ததன் விளைவுதான் இந்த விபத்து என்று அந்தப் பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Related Stories:

>