வரும் சட்டமன்ற தேர்தல்: தமிழகத்தின் வாழ்வுரிமையை மீட்கும் தேர்தலாக அமையும்: பரமக்குடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு

பரமக்குடி: வரும் சட்டமன்ற தேர்தல் தமிழகத்தின் வாழ்வுரிமையையும், தமிழர்களின் எதிர்காலத்தையும் மீட்கும் தேர்தலாக அமையும் என, பரமக்குடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற, ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார்.

தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திமுக ஆட்சி அமைந்தவுடன் தனித்துறை உருவாக்கப்பட்டு அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காணப்படும். ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு 80 கோடியில் நினைவிடம் கட்டும்போது, தலைவர் கலைஞருக்கு ஆறு அடி நிலம் கொடுக்காத நயவஞ்சக ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. கலைஞருக்கு இடம் கொடுக்காத இந்த ஆட்சியை தமிழகத்தை விட்டு விரட்டியடிப்போம்.

பழனிசாமி நயவஞ்சகர். நன்றி மறந்தவர். நம்பிக்கை துரோகம் செய்தவர் என்பது திமுக கட்சியினரை விட அதிமுக கட்சியினருக்கு அதிகம் தெரியும். சொந்த கட்சிக்காரர்களால் நிராகரிக்கப்பட்டு வருபவர் பழனிசாமி.

தமிழ்நாட்டுக்காகவும், தமிழர்களுக்காகவும் எந்த நன்மையும் செய்யாத, ஈழத் தமிழர்களுடைய வாழ்க்கையை திருப்பித்தர எந்த முயற்சியும் எடுக்காத அரசு நடக்கிறது. வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சர் இல்லை. ஊழலாட்சித்துறை அமைச்சர். அதிமுக ஆட்சியில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை ஆதாரத்துடன் ஆளுநருக்கு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. பேரறிவாளன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்வதில் ஆளுநர் முடிவு எடுக்கவில்லை. இதனை கண்டித்தே சட்டமன்றத்தில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது. கூட்டத்தை புறக்கணித்தது. ஊழல் நடைபெற்றதற்கு முகாந்திரம் இருப்பதால்தான் சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை தைரியமாக எதிர்க்கொள்ளாமல் ஏன் மேல் முறையீடு செய்தார் முதல்வர்? மடியில் கனம் இருப்பதால் தானே. வரும் சட்டமன்ற தேர்தல் தமிழகத்தின் வாழ்வுரிமையையும், தமிழர்களின் எதிர்காலத்தையும் மீட்கும் தேர்தலாக அமையும். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு பணிக்கு சல்லி காசு வாங்காமல் பணி நியமனம் நடக்கும். அதற்கு நான் உத்தரவாதம். மாதா, பிதா, குரு, தெய்வம். அதேபோல் கழகம், அண்ணா, பெரியார், கலைஞர் என்ற வழியில் தமிழகத்தில் எனது ஆட்சி நடைபெறும். கல்வி தந்த காமராஜரை போல், மாநில உரிமையை மீட்டுத் தந்த அண்ணாவை போல், மக்களின் நலத்திட்டம் மற்றும் மேம்பாட்டு திட்டம் கொண்டு வந்த கலைஞரை போல் ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும். இவ்வாறு அவர் பேசினார்.

மு.க.ஸ்டாலினின் பிரசார பாடல் டீசர் வெளியீடு

தமிழக சட்டசபைக்கான தேர்தல் மே முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க திமுக முழுவீச்சில் தயாராகி வருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது தொகுதி வாரியாக மக்களிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்று வருகிறார். மு.க.ஸ்டாலின் பிரசாரம் மக்களிடையே மிகுந்த எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர் வரும் 2021 சட்டமன்றத் தேர்தலுக்காக மேற்கொண்டு வரும் ”ஸ்டாலின் தான் வாராரு விடியல் தரப் போறாரு” பரப்புரைப் பயணத்திற்கான சிறப்புப் பாடலின் முன்னோட்டம் (டீசர்) வெளியிடப்பட்டுள்ளது.

காணொலி காட்சியில் திருமணம்

பரமக்குடி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று மதுரை விமான நிலையத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வந்தார். விமான நிலையத்திலிருந்து திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, மாநில விவசாய தொழிலாளர் அணி துணைச்செயலாளரும், செய்யாறு முன்னாள் எம்எல்ஏவுமான அன்பழகன் விஜயா மஞ்சுளா இல்லத் திருமணத்தை காணொலி காட்சி மூலமாக மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார்.

Related Stories:

>