×

சத்தியமங்கலம் பவானி ஆற்றில் ரூ.11.77 கோடியில் பாலம் கட்டும் பணி தீவிரம்

சத்தியமங்கலம்:  ஈரோடு  மாவட்டம் சத்தியமங்கலம் நகர்ப்பகுதி நாளுக்கு நாள் விரிவடைந்து வரும்  நிலையில் நகர் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.சத்தியமங்கலம் நகர் பகுதியின் நடுவே பவானி ஆறு ஓடுகிறது. நகரின் இரு  பகுதிகளை இணைக்கும் பவானி ஆற்று பாலம் மூலம் போக்குவரத்து நடைபெற்று  வருகிறது.   தமிழகம் – கர்நாடகம் இரு மாநிலங்களை இணைக்கும் திண்டுக்கல் –  பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சத்தியமங்கலம் பவானி ஆற்று பாலம்  வழியாக தினந்தோறும் 10,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கின்றன.  மேலும் இப்பாலம் வழியாக அந்தியூர், பவானி, மேட்டூர், கோபி,  ஈரோடு, மேட்டுப்பாளையம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில்  இருந்து சத்தியமங்கலம் வழியாக சரக்கு வாகன போக்குவரத்து மற்றும் பஸ்  போக்குவரத்து நடைபெற்று வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில்  சத்தியமங்கலத்தில் உள்ள பவானி ஆற்றின் குறுக்கே ஆர்ச் வடிவ பாலம்  கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்தது. நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து  அதிகரித்த நிலையில் குறுகலாக இருந்த பழைய பவானி ஆற்றுப் பாலத்தில்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் கடந்த 1987ஆம் ஆண்டு பழைய ஆற்றுப்  பாலத்தின் அருகே  புதிய பாலம் கட்டப்பட்டு அப்பாலத்தின் வழியாக வாகன  போக்குவரத்து நடைபெற்று வருகிறது.  ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட  பழைய பவானி ஆற்று பாலம் வலுவிழந்ததால் அப்பாலத்தின் வழியாக வாகன  போக்குவரத்து நடைபெறவில்லை. இந்த நிலையில் திண்டுக்கல் – பெங்களூர் தேசிய  நெடுஞ்சாலையில் உள்ள  பவானி ஆற்று பாலம் வழியாக தற்போது அதிகளவிலான  வாகனங்கள் கடந்து செல்கிறது. இதனால் ஆற்று பாலம் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து  நெரிசல் ஏற்படுகிறது.  பவானி ஆற்றின் குறுக்கே ஏற்கனவே ஆங்கிலேயர் ஆட்சிக்  காலத்தில் கட்டப்பட்ட பழைய பவானி ஆற்றுப்பாலத்திற்கு  பதிலாக கூடுதலாக  புதிய பாலம் கட்ட தேசிய நெடுஞ்சாலை துறை முடிவு செய்தது. அதன்படி பழைய பாலத்தை  இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய பாலம் கட்டுவதற்காக தேசிய நெடுஞ்சாலை  துறை சார்பில் ரூ.11.77 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி கடந்த மூன்று மாதங்களுக்கு  முன்பு டெண்டர் விடப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் பழைய  பாலம் இடித்து அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது  பவானி ஆற்றில் பாலம் கட்டுமான பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று  வருகிறது. முதற்கட்டமாக பவானி ஆற்றில் செல்லும் தண்ணீரை ஒரு புறமாக  திருப்பி விட்டு மற்றொருபுறத்திலிருந்து வட்ட வடிவிலான ராட்சத கான்கிரீட்  தூண் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.   பவானி ஆற்றின் குறுக்கே 6 தூண்கள்  கட்டப்பட்டு 11 மீட்டர் அகலத்தில் பாலம் கட்டப்படும் என தேசிய நெடுஞ்சாலை  துறை அதிகாரிகள் தெரிவித்தனர். புதிய பாலம் கட்டுமான பணிகள் தொடங்கி  விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் குறித்த நேரத்தில் கட்டுமான பணி  நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. …

The post சத்தியமங்கலம் பவானி ஆற்றில் ரூ.11.77 கோடியில் பாலம் கட்டும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Sathyamangalam Bhavani river ,Sathyamangalam ,Erode district ,Dinakaran ,
× RELATED ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உயிருக்கு போராடும் யானை..!!