நீர்ப்பாசன திட்டம் செயல்படுத்தும் விஷயத்தில் அமைச்சருடன் மரிதிப்பேகவுடா கடும் வாக்குவாதம்: மேலவை ஒத்திவைப்பு

பெங்களூரு: மண்டியா மாவட்டத்தில் செயல்படுத்துவதாக அறிவிக்கப்பட்ட நீர்ப்பாசன திட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக மஜத உறுப்பினர் மரிதிப்பேகவுடா எழுப்பிய குற்றச்சாட்டு சட்டமேலவையில் பரபரப்பையும் அமளியையும் ஏற்படுத்தியது. ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அவை ஒத்தி வைக்கப்பட்டது. சட்டமேலவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது மஜத உறுப்பினர் மரிதிப்பேகவுடா எழுந்து பேசும்போது, மண்டியா மாவட்டத்தில் என்னென்ன நீர்ப்பாசன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்ற விவரம் கேட்டார். அதற்கு நீர்ப்பாசன துறை அமைச்சர் பதில் கொடுக்கும் போது, மத்தூர் தாலுகாவில் ரூ.67 லட்சம் ெசலவில் மூன்று திட்டங்கள் செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட மரிதிப்பேகவுடா, மண்டியாவில் பணம் கொடுத்ததால் மூன்று திட்டங்கள் கொடுத்தீர்களா? என்று ஆவேசமாக கூறினார்.

மரிதிப்பேகவுடாவின் கருத்துக்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது. உடனே குறுக்கிட்ட மேலவை துணைத்தலைவர் எம்.கே.பிரணேஷ், அவையில் யார் பேசினாலும் அனுமதி பெற்று பேச வேண்டும் என்று எச்சரித்தார். மீண்டும் பேச தொடங்கிய மரிதிப்பேகவுடா, மண்டியா மாவட்டத்தில் நீர்ப்பாசன திட்டங்கள் செயல்படுத்துவதில் ஏற்ற-தாழ்வு காட்டப்படுகிறது. கடந்த மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் செயல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்த நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்தாமல் தடை செய்யப்பட்டுள்ளது. என்ன நோக்கத்திற்காக நிறுத்தி வைக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினார்.

அவருக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பசவராஜ்பொம்மை, கடந்த நிதியாண்டில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது என்று உறுப்பினர் கேட்ட கேள்விக்கு பதில் கொடுக்கப்பட்டுள்ளது. மத்தூர் தாலுகாவை தவிர பிற தாலுகாக்களில் வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது. மாநில அரசிடம் உள்ள நிதி ஆதாரத்தின் அடிப்படையில் தான் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. பணம் வாங்கி கொண்டு எந்த வளர்ச்சி திட்டமும் செயல்படுத்துவதில்லை. ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள் கூறுவது சரியல்ல. கடந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக அரசுக்கு வர வேண்டிய நிதி ஆதாரம் குறைந்ததால், சில திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்த நிதி குறைக்கப்பட்டுள்ளது. சில திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் அமைச்சர் பேசும்போது, பணம் வாங்கிக் கொண்டு வளர்ச்சி திட்டம் செயல்படுத்துவதாக உறுப்பினர் கூறுவது கவலையளிக்கிறது. அரசு திட்டங்கள் செயல்படுத்த யாரிடம் பணம் வாங்க முடியும். நமது மாநில வரலாற்றில் இதுபோன்ற செயல் எப்போதாவது நடந்துள்ளதா? எனது தொகுதியில் கூட பல வளர்ச்சி திட்டங்கள் நிதி பற்றாக்குறை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் மண்டியா மாவட்டத்தில் எந்த வளர்ச்சி பணியும் நிதி ஆதாரம் காட்டி நிறுத்தவில்லை. சில தொழில்நுட்ப பிரச்னை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கும் என்றார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய மரிதிப்பேகவுடா, மண்டியா மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை கையில் எடுத்துள்ள குத்தகைதாரர்களுக்கு சரியான நேரத்தில் பில் கொடுப்பதில்லை. அப்படி கொடுக்க வேண்டுமானாலும் மொத்த திட்ட மதிப்பில் 10 சதவீதம் கமிஷன் கொடுக்க வேண்டும். ஏன் புதிய திட்டங்கள் தொடங்க வேண்டுமானாலும் அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளதாக மீண்டும் குற்றம் சாட்டினார். பணம் கொடுத்த காரணத்தால் தான் மளவள்ளி தாலுகாவில் ரூ.7 லட்சம் மதிப்பிலான திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது என்றார்.

இப்பிரச்னை தொடர்பாக மீண்டும் அமைச்சர் பசவராஜ்பொம்மை மற்றும் மரிதிப்பேகவுடா ஆகியோர் இடையில் கடும் வாக்குவாதம் நடந்தது. ஒரு கட்டத்தில் அரசாங்கத்தை கடுமையான விமர்சனம் செய்து பேசினார். மரிதிப்பேகவுடாவின் பேச்சால் கோபமடைந்த அமைச்சர் பொம்மை, நீங்கள் என்ன மிரட்டுகிறீர்களா? என்றார். அப்போது அமைச்சர் கோட்டா சீனிவாசபூஜாரி உள்பட பாஜ உறுப்பினர்கள் அமைச்சர் பொம்மைக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். அப்போது மரிதிப்பேகவுடாவை சமாதானம் செய்யும் முயற்சியை மஜத உறுப்பினர்கள் பசவராஜ் ஹொரட்டி உள்பட பலர் மேற்கொண்டனர்.

அதே சமயத்தில் காங்கிரஸ் மற்றும் மஜதவை சேர்ந்த சில உறுப்பினர்கள் மரிதிப்பேகவுடாவுக்கு ஆதரவு கொடுத்தனர். இதனால் மீண்டும் அரசு மீது குற்றச்சாட்டை மரிதிப்பேகவுடா அடுக்கடுக்காக கூறினார். அவருக்கு பாஜ உறுப்பினர்கள் பதிலடி கொடுத்தனர். பாஜ உறுப்பினர் ஆயனூர் மஞ்சுநாத் பேசும்போது, மரிதிப்பேகவுடா மூத்த உறுப்பினர் அனுபவம் பெற்றவர், அவை தலைவராக இருந்து அவை நடத்தியவர். கேள்வி நேரத்தில் விதண்டாவாதம் செய்து நேரத்தை வீணாக்கியுள்ளதால், அவரை அவையில் இருந்து வெளியேற்றி சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றார். அவரின் கருத்துக்கு பாஜ உறுப்பினர்கள் நாராயணசாமி, ரவிகுமார் ஆகியோர் ஆதரவு கொடுத்தனர்.

அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி தலைவர் எஸ்.ஆர்.பாட்டீல் மற்றும் சி.எம்.இப்ராஹிம் ஆகியோர் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதில் கொடுத்துள்ளார். அதை ஏற்பதும் தவிர்ப்பதும் உறுப்பினரின் உரிமைக்கு உள்ளது என்றனர்.

ஆனால் மரிதிப்பேகவுடாவை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று பாஜ உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். அவர் மன்னிப்பு கேட்டாலும் ஏற்ககூடாது, அவையில் இருந்து சஸ்பென்ட் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவை தலைவர் இருக்கை முன் சென்று முழக்கம் எழுப்பினர்.

மேலும் கடந்த டிசம்பர் 15ம் தேதி அவையில் நடந்த கலவரம் தொடர்பாக மரிதிப்பேகவுடா கொடுத்துள்ள அறிக்கையில் அரசுக்கு எதிரான கருத்துகள் உள்ளதாக பாஜ உறுப்பினர்கள் தேஜஸ்விகவுடா, நாராயணசாமி ஆகியோர் மீண்டும் குற்றம்சாட்டினர். இதற்கு மஜத மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் கடும் கூச்சலும், குழப்பமும் நிலவியது. ஒரு கட்டத்தில் உறுப்பினர்களை சமாதானம் செய்ய மேலவை தலைவர் பிரதாப்சந்திரஷெட்டி மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்ததால், வேறு வழியில்லாமல் அவையை ஒத்தி வைத்தார்.

Related Stories:

>